கோப்புப்படம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிர்யாலகூடா பகுதியைச் சேர்ந்த ஏழை தம்பதியினர், சிறிய வீட்டில் வசித்தனர். திருமணமான மகனும் அதே வீட்டில் வசித்தார். இந்நிலையில், வயதான காலத்தில் 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரை வீட்டை விட்டு மகன் துரத்தி விட்டார். அவர்களுக்கு உறவினர்கள் அடைக்கலம் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நல்கொண்டா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரிடம் பெற்றோர் புகார் அளித்தனர். அதை படித்துப் பார்த்த ஆட்சியர், மகன் குடியிருந்த வீட்டுக்கு வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.
அவர்கள், ‘‘வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்தியது பெற்றோர் நல்வாழ்வு சட்டம்-2007னை மீறும் செயல். எனவே, இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை’’ என்று கூறி, மகனை வீட்டை விட்டு வெளியேற்றினர்.
அத்துடன் வயதான பெற்றோரை மீண்டும் அதே வீட்டில் தங்க வைத்து, அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பையும் வழங்கினர். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள், நல்கொண்டா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரை சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.