ஜி. பரமேஸ்வரா
பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே போட்டி நிலவி வரும் நிலையில், கர்நாடக முதல்வராக தான் வர வேண்டும் என்று சிலர் விரும்புவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் வர வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள், சித்தராமையா தொடர வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். சிலர் நான் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்னும் சில பேர் வேறு சிலர் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் விருப்பத்தை நீங்கள் தடுக்க முடியாது.
தேர்தல் நேரமாக இருந்தாலும் சரி, அதன் பிறகும் சரி முதல்வர் பதவி குறித்து பேச்சு எழும்போதெல்லாம், தலித்துகள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. இது தவறு என்று நான் நினைக்கவில்லை. இவை அனைத்துமே கட்சி மேலிடத்தின் முடிவுக்கு உட்பட்டது.
இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கட்சி மேலிடம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள்.” என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2023 மே மாதம் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சித்தராமையா முதல்வரானார். துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றார். அப்போதே, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமாரும் முதல்வர்களாக இருப்பது என ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, முதல் இரண்டரை ஆண்டு காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அம்மாநிலத்தில் முதல்வர் மாற்றம் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் உரிய முடிவை எடுக்கும் என கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.
இந்நிலையில், டி.கே. சிவகுமாருடன் தனக்கு நல்லுறவு இருப்பதை வெளிப்படுத்தும் வகையில், அவரை இன்று காலை சிற்றுண்டிக்கு முதல்வர் சித்தராமையா அழைத்திருந்தார். இதை ஏற்று டி.கே. சிவகுமார், சித்தராமையாவின் இல்லத்துக்குச் சென்று காலை உணவு உண்டார்.