மோதலுக்கு தீர்வு? - டி.கே.சிவகுமாருக்கு விருந்து கொடுத்த சித்தராமையா!

மோதலுக்கு தீர்வு? - டி.கே.சிவகுமாருக்கு விருந்து கொடுத்த சித்தராமையா!
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கான அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை இன்று (நவ.29) தனது இல்லத்துக்கு அழைத்து காலை உணவு விருந்து அளித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளைக் களையும் பொருட்டு, காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என அறிவுறுத்தியதன் பின்னரே, இந்த காலை உணவுச் சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, டி.கே.சிவகுமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரைச் சந்திக்க டெல்லிக்கு விரைவில் செல்ல உள்ளார்.

சித்தராமையாவும், சிவகுமாரும் காலை உணவு சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இருவருக்கும் இடையிலான உறவு இணக்கமாக இருப்பதாக காட்டவே இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது கர்நாடக காங்கிரஸில் நீடித்து வரும் உட்கட்சி பிரச்சினைகள், முதல்வர் பதவிக்கான போட்டி தொடர்பான சர்ச்சைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக, சிவகுமார் தாம் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருப்பதாக உறுதிப்படுத்தியதுடன், கட்சியின் தலைமைப் பதவி குறித்த இறுதி முடிவை மேலிடமே எடுக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதேபோல், முழு ஆட்சிக் காலத்திற்கும் முதல்வராகப் பதவி வகிப்பேன் என்ற தமது நிலைப்பாட்டில் சித்தராமையாவும் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது சித்தராமையா இரண்டரை ஆண்டு ஆட்சிகாலத்தை நிறைவு செய்துள்ளதால், சிவகுமாரை அடுத்த முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, இந்த உட்கட்சி பூசலைக் கட்டுப்படுத்தத் தவறிய காங்கிரஸ் தலைமையைக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இத்தகைய பதற்றம் கட்சியின் எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

மோதலுக்கு தீர்வு? - டி.கே.சிவகுமாருக்கு விருந்து கொடுத்த சித்தராமையா!
சென்னை, புறநகரில் டிட்வா புயல் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in