இந்தியா

12-ம் வகுப்பு முறைகேட்டை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு: சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு விடைத்​தாள் திருத்​தும் பணி​யில் ஏற்​பட்ட குளறு​படிகள் காரண​மாக அதன் தலை​வர், செயலர் மாற்​றப்​பட்டு உள்​ளனர். இதுதொடர்​பான முறை​கேடு​களை விசா​ரிக்க சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்டு உள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) சார்​பில் நடப்​பாண்டு 10-ம் வகுப்​பு, 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு விடைத்​தாள்​களை டிஜிட்​டல் முறை​யில் திருத்​தம் செய்ய ஆன் ஸ்கிரீன் மார்க்​கிங் (ஓஎஸ்​எம்) என்ற புதிய தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டது. தெலங்​கானா தலைநகர் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த கோஎம்ப்ட் எஜுடெக் பிரைவேட் லிமிடெட் நிறு​வனம் ஓஎஸ்​எம் டிஜிட்​டல் மதிப்​பீட்​டுக்​கான கட்​டமைப்​பு​களைச் செய்து கொடுத்​தது.

இந்​தச் சூழலில் கடந்த மே 13-ம் தேதி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு​கள் வெளி​யாகின. அப்​போது முதல் மாணவ, மாணவி​கள் தரப்​பில் பல்​வேறு புகார்​கள் கூறப்​பட்டு வரு​கின்​றன. டெல்​லியைச் சேர்ந்த மாணவர் வேதாந்த், இயற்​பியல் தேர்​வில் 65 மதிப்​பெண்​களைப் பெற்​றிருந்​தார். மதிப்​பெண் குறை​வாக இருந்​த​தால் சந்​தேகமடைந்த அவர், இயற்பியல் பாடத்​துக்​கான விடைத்தாள் நகலைக் கேட்​டுப் பெற்​றார். அந்த விடைத்​தாள் வேறு ஒரு​வருடையது என்​பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த வேதாந்த், சிபிஎஸ்இ நிர்​வாகத்​திடம் இ-மெ​யில் வாயி​லாக புகார் அளித்​தார்.

மேலும், ஜார்க்​கண்ட் தலைநகர் ராஞ்​சியை சேர்ந்த மாணவர் சர்​தாக், ஓஎஸ்​எம் டிஜிட்​டல் திருத்​தப் பணிக்​காகத் தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்ட டெண்​டரில் பல்​வேறு முறை​கேடு​கள் நடை​பெற்​றிருப்​ப​தாக ஆதா​ரங்​களு​டன் குற்​றம் சாட்​டி​னார்.

இந்​தச் சூழலில் சிபிஎஸ்இ சார்​பில் மதிப்​பெண் சரி​பார்ப்பு மற்​றும் விடைத்​தாள் மறும​திப்​பீட்​டுக்​காகத் தனி போர்ட்​டல் தொடங்​கப்​பட்​டது. இந்த தளத்​தைப் பயன்​படுத்​து​வதைத் தடுக்​கும் நோக்​கில், வெறும் 2 நிமிடங்​களுக்​குள் போர்ட்​டலுக்கு 15 லட்​சம் ஹிட்ஸ் (வரு​கைகள்) வந்​துள்​ளன. இது குறித்து சிபிஎஸ்இ எக்ஸ் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

சிபிஎஸ்இ மறுமதிப்​பீடு போர்ட்​டல் தற்​போது ஒரே நேரத்​தில் 8,000-க்​கும் மேற்​பட்ட பயனர்​களுக்கு தடை​யின்றி சேவை​களை வழங்கி வரு​கிறது. மதி​யம் 3 மணி வரை 16,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தங்​களது விண்​ணப்​பங்​களை வெற்​றிகர​மாக சமர்ப்பித்​துள்​ளனர்.

இன்று (நேற்​று) ஆயிரக்​கணக்​கான மாணவர்​கள் சிபிஎஸ்இ மறும​திப்​பீடு போர்ட்​டலைப் பயன்​படுத்​திய வேளை​யில், மர்ம நபர்​கள் தொடர்ச்​சி​யான சைபர் தாக்​குதல்​கள் மூலம் சேவை​களைச் சீர்​குலைக்க முயன்​றனர். இதில் 'டினையல் ஆஃப் சர்​வீஸ்' தாக்​குதலால் வெறும் 2 நிமிடங்​களில் போர்ட்​டலில் 15 லட்​சம் ஹிட்ஸ் பதி​வாகின. அதோடு, அனு​ம​தி​யின்றி கோப்​பு​களை அணுக 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தச் சூழலில் சிபிஎஸ்இ தலை​வர் ராகுல் சிங், செயலர் ஹுமான்ஷு குப்தா ஆகியோர் நேற்று மாற்​றப்​பட்​டனர். சிபிஎஸ்இ ஓஎஸ்​எம் டெண்​டர் வழங்​கப்​பட்​ட​தில் நடை​பெற்ற முறை​கேடு​கள் குறித்து விசா​ரணை நடத்த ஒரு நபர் சிறப்பு புல​னாய்வுக் குழு அமைக்​கப்​பட்டு உள்​ளது. இந்​தக் குழு​வின் தலை​வ​ராகத் திறன் மேம்​பாட்டு ஆணை​யத்​தின் தலை​வர் ராதா சவு​கான் நியமிக்​கப்​பட்டு உள்​ளார். அடுத்த 30 நாட்​களில் மத்​திய பணி​யாளர்​ மற்​றும்​ பயிற்​சி துறை​யிடம்​ குழு​வின்​ சார்​பில்​ அறிக்​கை சமர்​ப்​பிக்​கப்​பட உள்​ளது.

சிபிஎஸ்இ புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி லோகண்டே பிரசாந்த் சீதாராம் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய செயலாளராக மூத்த அரசு அதிகாரி வருண் பரத்வாஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT