படம்: எம்.முத்துகணேஷ் 

இந்தியா

மேற்கு ஆசியாவில் இருந்து இதுவரை 2.80 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியதாக மத்திய அரசு தகவல்

மோகன் கணபதி

புதுடெல்லி: ஈரான் போர் தொடங்கிய பிப்.28 முதல் இதுவரை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் இந்தியர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டம் டெல்லியில் இன்று (மார்ச் 19) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வளைகுடா விவகாரங்கள்) அசீம் மகாஜன், ‘‘மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சில நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், அதன் அண்டை நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதை அடுத்து ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. பிப்.28 முதல் இந்த பிராந்தியத்தில் இருந்து சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.

          

குவைத்தின் வான்வெளி பிப்.28 முதல் மூடப்பட்டுள்ளது. கத்தார் வான்வெளி பகுதியளவே திறந்துள்ளது. பஹ்ரைன் வான்வெளியும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓமன் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

கத்தார் வான்வெளி பகுதியளவே திறந்துள்ள நிலையில், கத்தார் ஏர்வேஸ் இந்தியாவுக்கு திட்டமிடப்படாத வணிக விமானங்களை இயக்கி வருகிறது. கத்தார் ஏர்வேஸ் இன்று இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 9 விமானங்களை இயக்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே மார்ச் 18 அன்று 75 விமானங்கள் இயக்கப்பட்டன. இன்று (மார்ச் 19) 90 விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோதல்களுக்கு மத்தியில் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருதை இது காட்டுகிறது.

குவைத்தில் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், சவூதி அரேபியாவின் அல் கைசுமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்குச் சிறப்பு, திட்டமிடப்படாத விமானங்களை இயக்கப் போவதாக குவைத்தின் ஜசீரா ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதில் முதல் விமானம் வெள்ளிக்கிழமையன்று கொச்சிக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பஹ்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சவூதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையத்தில் இருந்து கல்ஃப் ஏர் நிறுவனம் சிறப்பு விமானங்களை இயக்குகிறது. வரும் நாட்களில் சிறப்பு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக்கில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்கள், அவசரத் தேவைகளுக்காக சவூதி அரேபியா வழியாக பயணம் செய்ய நாங்கள் தொடர்ந்து வசதி செய்து வருகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT