இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் ராஜேந்திரா நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மூதாட்டி ஒருவர் வீட்டில் சேகரமான தினசரி குப்பையை அவ்வழியாக வந்த மாநகராட்சிக் குப்பை சேகரிப்பு வாகனத்தில் போட்டார்.
அப்போது தவறுதலாக ஆன்மீக சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் 2 கிலோ வெள்ளிக் குவளை இருந்த பையையும் அதில் போட்டுவிட்டார். இதை குடும்பத்தினர் உணர்வதற்குள் நகரின் குப்பை மாற்றும் நிலையத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, பிறகு அங்கிருந்து திடக்கழிவு மேலாண்மை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. மூதாட்டியின் குடும்பத்தினர் உதவி கேட்டு மாநகராட்சி அதிகாரிகளை அணுகினர். அவர்கள் வெள்ளிக் குவளையை மீட்பதற்கான முயற்சிகளை தொடங்கினர்.
இதற்குள் குப்பைகளை காகிதம், பிளாஸ்டிக், உலோகம் என தரம் பிரிக்கும் அந்த மையத்தில் அடையாளம் தெரியாத அந்த குவளையை உலோக கழிவுக் குவியலுக்குள் ஊழியர்கள் சேர்த்துவிட்டனர். இதையடுத்து டன் கணக்கிலான அந்த உலோக கழிவுக் குவியலை தூய்மைப் பணியாளர்கள் சுமார் 48 மணி நேரம் ஆராய்ந்தனர். இறுதியாக மங்கலாக இருந்த அந்த குவளையை அடையாளம் கண்டு மீட்டனர்.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் விஜய் யாதவ் கூறுகையில், “இந்தூர் நகரம் முழுவதிலுமிருந்து தினமும் நூற்றுக்கணக்கான டன் கழிவுகள் இந்த மையத்திற்கு கொண்டு வரப்படுவதால், முதலில் கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாகவே தோன்றியது.தகவல் தெரிவிப்பதில் சில மணிநேரம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் கூட, ரூ.5 லட்சம் மதிப்புள்ள அந்த குவளை நிரந்தரமாக தொலைந்துபோயிருக்கும்” என்றார்.
இதற்கிடையில் அந்த மூதாட்டி ஆன்மீக யாத்திரைக்காக வெளியூர் சென்றிருப்பதால் அவர் திரும்பும் வரை வெள்ளிக் குவளையை பாதுகாப்பாக வைத்திருக்க உள்ளூர் நகராட்சி கவுன்சிலர் பிரசாந்த் பட்வேயிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.