இந்தியா

“நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்வதா; நாடாளுமன்றத்துக்கு வருவதா?” - அதிர் ரஞ்சன் சவுத்ரி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா திடீர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எங்கள் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டுமா அல்லது நாடாளுமன்றத்துக்கு வர வேண்டுமா என காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி.யும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் பெர்ஹாம்பூர் தொகுதி வேட்பாளருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “கட்சியின் அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் தற்போது தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் திடீரென இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், அவர்கள் அவைக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர்.

விவாதம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நீடித்தால், எங்கள் தலைவர்களால் அவையை விட்டு வெளியேறவே முடியாத சூழல் ஏற்படும். இது எங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தேர்தல் நாட்களுக்கு நடுவே இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியிருப்பது, எங்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களை சிக்கலுக்கு உள்ளாகி விட்டது.

இது எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஒரு அரசியல் ஆயுதம்.பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி வெகு காலத்திற்கு முன்பே எழுப்பியிருந்தது. அப்போது பாஜக இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது. ஆனால், இன்று அதே கட்சி, அதற்கான முழுப் பெருமையையும் தானே தட்டிக்கொள்ள விரும்புகிறது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமலும், அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையைப் பெறாமலும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு 'தொகுதி மறுவரையறை' நடவடிக்கையையும் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாது” எனத் தெரிவித்தார்.

தேர்தல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீட்டிக்கப்படுவதையும், மகளிர் மசோதா அறிமுகப்படுத்தப்படுவதையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர சோனியா காந்தி ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த எதிர்ப்பை முன்னின்று நடத்துகிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 368-வது பிரிவின்படி, ஒரு மசோதாவைத் திருத்துவதற்கு சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படுவதாகக் கருதப்படுகிறது. இந்த சிறப்புப் பெரும்பான்மை என்பது அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரையும், வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கையும் குறிக்கும். முன்மொழியப்பட்ட மூன்று மசோதாக்களில் ஒன்று 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா ஆகும்.

இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படும். உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மக்களவையில் அரசுக்கு சவால் ஏற்படக்கூடும். இருப்பினும், மற்ற இரண்டு மசோதாக்களை நிறைவேற்ற வெறும் 50 சதவிகித பெரும்பான்மையே போதுமானது. அது பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் இரு அவைகளிலும் உள்ளது.

இப்போது, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக 2029 பொதுத் தேர்தலின் போது மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படாமல் போகும் சூழலும் உள்ளது. இது நேர்ந்தால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமலாக்க எதிர்க்கட்சிகள் தங்களைத் தடுப்பதாக பாஜக புகார்களை முன்வைக்கும். எனவே, மகளிர் சட்டம் நிறைவேறுவது அல்லது தோல்வியடைவது ஆகிய இரண்டுமே பாஜகவிற்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT