மும்பை: மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் 300 மிமீ-க்கும் அதிகமான மழை பதிவானதைத் தொடர்ந்து, தாதர் ரயில் நிலையம் உட்பட மும்பையின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த கனமழையை, "மிகக் கடுமையான மழை" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மும்பையில் 248 மிமீ மழை பதிவானது. இது தெற்கு மும்பையில் கடந்த பத்தாண்டுகளில் ஜூன் மாதத்தில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மழையாகும். மகாராஷ்டிராவின் பல இடங்களில் கனமழை தொடர்கிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மும்பை மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்தது. பின்னர் இன்று காலை 7 மணிக்கு இந்த எச்சரிக்கை 'ஆரஞ்சு அலர்ட்' ஆக மாற்றப்பட்டது.
காலை 10 மணி வரையிலுமே மும்பை, தானே, ராய்கட், பால்கர் மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் தீவிரமான மழை பெய்தது.
முன்னதாக, நேற்றிரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் புதன்கிழமை காலையில், மும்பையின் பல பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு மும்பையின் விக்ரோலி மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே இருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. புதன்கிழமை காலை பலத்த மழை பெய்ததால், மத்திய மற்றும் மேற்கு புறநகர் ரயில் பாதைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பான தாதர் ரயில் நிலையம் நீரில் மூழ்கியது. கனமழையின் போது தாதர் பகுதியில் கார் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் அது சேதமடைந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மும்பை நகரின் பல பகுதிகளில் 300 மி.மீ-க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக பிஎம்சி தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் 204.4 மி.மீ-க்கு மேல் பதிவாகும் மழையை 'மிகக் கடுமையான மழை' (extremely heavy) என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. கன மழை காரணமாக மும்பையின் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நீர் தேங்கியதால் புதன்கிழமையன்று அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது.
மும்பையில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 10ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 13 நாட்கள் தாமதமாக ஜூன் 23ல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.