பம்பாய் பங்குச் சந்தை அலுவலகம் | கோப்புப் படம்

 
இந்தியா

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 3,656 புள்ளிகள் உயர்வு!

தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் உயர்வு

மோகன் கணபதி

மும்பை: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 3,656 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1,219 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளது. சென்செக்ஸ் தொடக்க வர்த்தகத்தில் 3,656.74 புள்ளிகள் உயர்ந்து 85,323.20 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 1,219.65 புள்ளிகள் உயர்ந்து 26,308.05 ஆக இருந்தது. பின்னர் இரு குறியீடுகளும் தொடர்ந்து ஏற்றம் கண்டன. இது பங்குச் சந்தைகளில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

          

சென்செக்ஸ் நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல் பஜாஜ் ஃபின்சர்வ், இன்டர்குளோப் ஏவியேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் 3.7 சதவீதம் முத் 7.2 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமாகின. முன்னணி நிறுவனங்களில் ஐடிசி மட்டுமே சரிவைச் சந்தித்த ஒரே நிறுவனமாக இருந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு வியூக நிபுணர் வி.கே.விஜயகுமார், ‘‘இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தம், வளர்ச்சி சார்ந்த பட்ஜெட் ஆகியவற்றின் காரணமாக பங்குச் சந்தை உற்சாகமடைந்துள்ளது. இது முதலீட்டு ஆர்வத்தை அதிகரிக்கும். இதனால், பங்குச் சந்தை ஏற்றம் காணும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார். பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதை அடுத்து அவரது அறிவிப்பு வெளியானது. பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அஸ்வினை வைஷ்ணவும் இதனை உறுதிப்படுத்தினர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா ஒப்புக்கொண்டதால், அதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியும் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரி இனி 18 சதவீதமாகக் குறைகிறது.

பதிலுக்கு, 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை பூஜ்ஜியமாகக் குறைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறி உள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையேயான இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு மக்களுக்கும் பெரிதும் நன்மை பயக்கும் என அஸ்வினை வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT