இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் அறிவிப்பும் பின்னணியும்

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் அறிவிப்பும் பின்னணியும்
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பை அடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடினார். இந்த தொலைபேசி உரையாடலை முதலில் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், ‘‘நான் பலமுறை கூறியது போல, அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியை உண்மையாகவே ஒரு சிறந்த நண்பராகக் கருதுகிறார்! வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்தியை இன்று மாலை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் வரம்பற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன’’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடன் மேற்கொண்ட உரையாடலை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது அருமை நண்பர்களில் அவர் ஒருவர். வலிமையான மற்றும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர். வர்த்தகம், ரஷ்யா - உக்ரைன் போர் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அவர் உறுதி அளித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த நகர்வு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும்.

பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் நான் கொண்டுள்ள மதிப்பு காரணமாக அவரது கோரிக்கையை ஏற்று வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து முடித்துள்ளோம். அந்த வகையில் பரஸ்பர வரி விதிப்பு 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும். பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கான தனது வரி மற்றம் வரி இல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும்.

500 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி மற்றும் பல பொருட்களை அமெரிக்காவில் இருந்து பெறுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இந்தியாவுடனான உறவு முன்பை விடவும் வரும் நாட்களில் வலுவாக இருக்கும்” என ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப் உடனான தொலைபேசிய உரையாடல் தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக ஊடக பதிவில், “இன்று எனது அன்பு நண்பர் அதிபர் ட்ரம்புடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அற்புதமான அறிவிப்புக்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக அதிபர் டிரம்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, ​​அது நமது மக்களுக்குப் பயனளிக்கும். பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகளை இது திறக்கிறது. அதிபர் ட்ரம்ப்பின் தலைத்துவம், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கிறது. இந்த கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரங்களுக்கு கொண்டு செல்ல அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பிரதமர் மோடி உறுதிப்படுத்தவில்லை. பிரதமர் மோடியின் பதிவை அடுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதவில் இதனை உறுதிப்படுத்தினார். அவர் தனது பதிவில், ‘‘இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இது இரு நாட்டு மக்களுக்கும் தொழில்களுக்கும் பயனளிக்கும் ஒரு ஒப்பந்தம்’’ என தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் அறிவிப்பும் பின்னணியும்
பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி - அண்ணாமலை திடீர் விலகல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in