புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தீபாவளி தேநீர் விருந்து அளித்தார்.
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், குமாரி செல்ஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் வந்திருந்தனர். முன்னாள் முதல்வர்கள் பூபிந்தர் சிங் ஹூடா (ஹரியானா), பூபேஷ் பகேல் (சத்தீஸ்கர்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), ஹரீஷ் ராவத் (உத்தராகண்ட்), திக்விஜய சிங் (ம.பி.) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த விருந்தில் ராகுல் காந்தி அரசியல் பேசாமல், தலைவர்களுடன் கலகலப்பாக உரையாடி தீபாவளி வாழ்த்துகளை மட்டுமே பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கட்சியினரின் ஒற்றுமையை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பாக அமைந்தாலும், வாக்குத் திருட்டுப் பிரச்சாரத்தைத் தீவிரமாக முன்னெடுக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
விருந்துக்குப் பின் மூத்த தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேநீர் விருந்தில் அரசியல் பேசப்படவில்லை. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை.
ஜனநாயகத்தைக் காக்க வேண்டியவர்களே தவறிவிட்டனர் என்பதற்கான ஆதாரங்களை ராகுல் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். 140 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டும் வாழ்நாள் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.