ஸ்ரீநகர்: லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது லத்தீப் பட், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக, அவரை சரணடையுமாறு வீடியோ காலில் பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், குல்காம் மாவட்டம், ஜங்கல்போரா கிராமத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி முகமது லத்தீப் பட் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக, பாதுகாப்புப் படை அதிகாரிகள் வீடியோ காலில் அவரைத் தொடர்புகொண்டு சரணடையுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அவரிடம் பாதுகாப்புப் படை அதிகாரிகள் வீடியோ காலில் பேசியபோது, “நான் அல்லாவைச் சந்திக்கப் போகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அல்லா என்னுடன் இருக்கிறார்” என்று அவர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதற்கு அந்த அதிகாரி, “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி, அவரைச் சரணடையுமாறு வலியுறுத்தினார். ஆனால், லத்தீப் பட் சரணடைய மறுத்து விட்டார். இதையடுத்து, லத்தீப் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லத்தீப் பட் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சுமார் 2 மணி நேரத்துக்கு முன்பே, சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் ஜி.பி. சிங் “வாழ்த்துகள் நண்பர்களே! சில உணவுகள் குளிர்ந்த பிறகுதான் சிறப்பாக இருக்கும். குளிரான வானிலையில் கூட இது பொருந்தும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சிஆர்பிஎப் உயர் அதிகாரியின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் காவல் துறையும் காலை 10.20 மணிக்கு எக்ஸ் தளத்தில், “நீங்கள் ஓடலாம்; ஆனால் ஒளிந்துக் கொள்ள முடியாது” என்று பதிவிட்டது.
இதுகுறித்து, குல்காம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனயத் அலி சவுத்ரி கூறும்போது, “லத்தீப் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுடத் தொடங்கியதால் துப்பாக்கிச் சண்டை தீவிரமடைந்தது. லத்தீப், ஒரு மசூதிக்குள் பதுங்கியிருந்தார். சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர் அதனை ஏற்க மறுத்தார். இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லத்தீப் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றார்.