இந்தியா

பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? - உச்ச நீதிமன்றம் கேள்வி

மோகன் கணபதி

புதுடெல்லி: “பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த மனுதாரரான மாணவரின் பெற்றோர் இருவரும் மாநில அரசு பணியாளர்களாக உள்ளதை கருத்தில் கொண்டு அந்த மாணவருக்கு இடஒதுக்கீட்டில் இருந்து அம்மாநில உயர் நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து அந்த மாணவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் பூயான் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டின் மூலம் சமூக முன்னேற்றம் சாத்தியமாகிறது. பெற்றோர்கள் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு வேண்டும்? பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு கோருவதன் மூலம், நாம் அதில் இருந்து ஒருபோதும் விடுபட முடியாது.

மாணவர்களின் பெற்றோர் நல்ல வருமானத்துடன் சிறந்த வேலைகளில் இருந்தால் பிள்ளைகள் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட வேண்டும். இதுபோன்ற வசதியான பிரிவினரை இடஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து விலக்குவதற்கு அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகள் வழிவகுக்கின்றன. ஆனால் அவற்றுக்கு எதிராக இப்போது வழக்குகள் தொடுக்கப்படுகின்றன” என குறிப்பிட்டனர்.

இதையடுத்து, வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT