கோப்புப் படம்
புதுடெல்லி: கடந்த ஜூலை 20 அன்று சிஜேபி நடத்திய போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக சிஜேபி அறிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஜூலை மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போராட்டக்காரர்கள் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டத்தில், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும், ஜூலை 20 மற்றும் அதை ஒட்டி டெல்லியிலும் நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்த நிலையில், மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மாணவர் பிரதிநிதிகளிடம் உறுதி அளித்தனர். இதையேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், அரசு சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்று குற்றம் சாட்டிய சிஜேபி, வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி செப்.5-ம் தேதி டெல்லியில் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது.
இதனிடையே, இந்தப் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பின்னணியில், மாணவர் போராட்டங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரியும், ஜூலை 20 முதல் ஜூலை 25 வரையிலான போராட்டங்கள் தொடர்பாக இனி எந்த முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்படாது என்று உறுதியளித்தும் மத்திய அரசு (டெல்லி காவல் துறை) மற்றும் பிஹார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் அதிரடி:
ஜூலை 25 அன்று சிஜேபி தலைவர்களிடம் மத்திய அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் இந்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 142 மூலம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, செப்.5-ம் தேதி நடத்த இருந்த போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொள்வதாக சிஜேபியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“இந்திய அரசின் சாதகமான உறுதிமொழிகள் மற்றும் அவற்றுக்கு இன்று நீதிமன்றம் அளித்துள்ள அங்கீகாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக் கருத்தில் கொண்டும், செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருந்த பேரணிக்கான அழைப்பை திரும்பப் பெறுவது பொருத்தமானது என்று சிஜேபி கருதுகிறது.
இன்றைய உத்தரவு முறையாகச் செயல்படுத்தப்படும் என்று சிஜேபி எதிர்பார்க்கிறது. இந்த முடிவுக்காக நீதிமன்றத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என சவுரவ் தாஸ் தெரிவித்தார்.
முன்னதாக, செப்.5-ம் தேதி போராட்டம் குறித்த அறிவிப்பின்போது, ‘டெல்லி இந்தியா கேட்டில் தொடங்கி டெல்லி காவல் துறை தலைமையகம் வரை பேரணி நடைபெறும். ஜூலை மாதப் போராட்டங்களின்போது காவல் துறை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களும், தற்கொலை செய்துகொண்ட நீட் (NEET) தேர்வு ஆர்வலர்களின் குடும்பத்தினரும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துவார்கள். அவர்களுக்குப் பின்னால் மாணவர் சமூகம் பெருமளவில் அணிவகுத்துச் செல்லும்’ என்று சிஜேபி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.