புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியின்போது பயன்படுத்தப்பட்ட விரைவு அதிரடிப் படையின் வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்தும் உச்ச நீதிமன்றம் சில கருத்துகளை முன்வைத்துள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த 20-ம் தேதி டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட இந்த பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள், மாணவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
இந்தப் பேரணியின்போது, பாதுகாப்புப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தியதற்கு எதிராக பெல்லட் குண்டுகளால் காயமடைந்த இரண்டு நபர்கள் மற்றும் முன்னாள் மத்திய தகவல் ஆணையர் யஷோவர்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த நாடு தழுவிய அளவில் தடை விதிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் இழப்பீடு, விரிவான மருத்துவ பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிருந்தா குரோவர், “கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த நாடு தழுவிய அளவில் தடை விதிக்க வேண்டும். ஜூலை 20 அன்று நடந்த போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது குறித்து ஆராய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அப்போது, விதிவிலக்காக அசாதாரண சூழல் நிலவும் பட்சத்தில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த காவல் துறையினருக்கு அனுமதி உள்ளது. ஆனால், அமைதியான போராட்டத்தில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், போராட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட விரைவு அதிரடிப் படையின் வெடிமருந்துப் பதிவேடு பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன், பெல்லட் துப்பாக்கிச் சூடு காரணமாக காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு டெல்லி அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.