மாநிலங்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்கல் - ‘கடும் விதிகள் இல்லை’ என காங். விமர்சனம்

மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி உரையாற்றிய ஜிதேந்திர சிங்

மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி உரையாற்றிய ஜிதேந்திர சிங்

Updated on
2 min read

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் கடுமையான விதிகள் இதில் இல்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா எனப்படும் பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா 2026 மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று (ஜூலை 29) நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மீதான விவாதத்துக்கு 7 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய ஜிதேந்திர சிங், “நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த மசோதா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. புதிய சட்டத்தின் கீழ், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இரண்டு மாதங்களுக்குள் விசாரணையும், மூன்று மாதங்களுக்குள் வழக்கு விசாரணையும் (trial) முடிக்கப்பட வேண்டும்.

வினாத்தாள் கசிவு என்பது ஒரு தீவிரமான பிரச்சினை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு மாநில அரசுகளின் ஆட்சிக்காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மிகவும் முக்கியம்” என குறிப்பிட்டார்.

விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த மசோதாவில் மேலோட்டமான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பயனுள்ளதாக இருக்காது.

காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கிறது. என்றாலும், வெளிப்படையான மற்றும் வினாத்தாள் கசிவு இல்லாத தேர்வுகளை உறுதி செய்வதற்கான மிகக் கடுமையான விதிகள் இதில் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது” என தெரிவித்தார்.

மசோதாவின் பின்னணி:

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவை தடுக்க புதிய மசோதா கொண்டு வரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

அதற்கிணங்க, கடந்த 27ம் தேதி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பொதுத் தேர்வு (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா 2026-ஐ மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது ஜூலை 28, 29 ஆகிய தேதிகளில் விவாதங்கள் நடைபெற்றன. ஜூலை 28 அன்று நடந்த விவாதத்தின்போது, அமைச்சர் ஜிதேந்திர சிங், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பேசினர்.

ஜூலை 29 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைச் சேர்க்கும் வகையில் மசோதாவின் சில பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

2024-ம் ஆண்டின் முந்தைய வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத்தில் சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன.

முன்பு ஒரு கோடியாக இருந்த அபராதம் இப்போது ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருந்த சிறைத் தண்டனை இப்போது ஐந்து முதல் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, மற்றும் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்படும்.

திட்டமிட்ட குற்ற கும்பல்களுக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை (முன்பு இது 5 ஆண்டுகளாக இருந்தது) மற்றும் ரூ.10 கோடி அபராதம் (முன்பு இது ரூ.1 கோடி) விதிக்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி உரையாற்றிய&nbsp;ஜிதேந்திர சிங்</p></div>
“உங்கள் வாயை யாராவது தைத்து விட்டார்களா?” - நாடாளுமன்றம் வராத அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in