இந்தியா

“அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி அஞ்சினார்”: சமாஜ்வாதி கட்சி எம்.பி

வேட்டையன்

லக்னோ: கடந்த 2024 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி அஞ்சியதாக சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர் ஷிவ் பால் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காமல் போயிருந்தால் ஒரே ஒரு இடத்தில் கூட வென்று இருக்காது.

தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அஞ்சினார். அதன் பின்னர் எங்கள் தலைவர் அகிலேஷ் யாதவ் கொடுத்த உறுதியை ஏற்று ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். அவர் போட்டியிடவில்லை என்றால் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அகிலேஷ் தெரிவித்தார். அதன் பிறகே அதை ராகுல் ஏற்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒவ்வொரு வாக்கும் அவர்களுக்கு செல்வதை சமாஜ்வாதி கட்சி உறுதி செய்தது. அதனால் தான் அவர்களுக்கு ஆறு தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. நாங்கள் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்” என்றார்.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி அங்கு நடைபெறுகிறது. 2022-ல் உ.பி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. அதன் மூலம் சமாஜ்வாதி கட்சி 101 எம்.எல்.ஏ-க்களை பெற்றது. காங்கிரஸ் கட்சி 2 எம்.எல்.ஏ-க்களை கொண்டுள்ளது.

இந்த சூழலில் எதிர்வரும் தேர்தலில் 150 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சியிடம் காங்கிரஸ் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் பிரதாப்கர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஷிவ் பால் சிங் இதை தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைந்தால் நிச்சயம் எங்களுக்கு பலன் தரும். அது கைகூடாமல் போனாலும் எங்களுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. ஆனால், அவர்கள் தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. அதை நான் உறுதியாக சொல்வேன்” என்று ஷிவ் பால் சிங் தெரிவித்துள்ளார்.

“தனது வரம்பை அறிந்து ஷிவ் பால் சிங் பேச வேண்டும். இது போன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும். இண்டியா கூட்டணியால் தான் அவர், எம்.பி ஆனார். அவருக்கு சமாஜ்வாதி கட்சி கடிவாளம் போட வேண்டும்” என்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவாஷி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT