புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தேர்தல்களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், 'ஸ்ரீ சம்மான் சம்ருத்தி யோஜனா' (பெண்களுக்கான கண்ணியம் மற்றும் செழிப்புத் திட்டம்) என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன் கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கப்படும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறும்போது, ''ஸ்ரீ சம்மான் சம்ருத்தி யோஜனா என்பது, மக்கள் தொகையில் 50% பங்கு வகிக்கும் பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதற்கான ஒரு உறுதிமொழி. இந்த தொகை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும்'' என்றார்.
உத்தர பிரதேசத்தில் 60 வயது பெண்கள் அரசு பேருந்துகளில் முற்றிலும் இலவசமாக பயணம் செய்யும் ’லோக் மாதா அஹில்யாபாய் மத்ரிசக்தி யாத்ரா’ என்கிற திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தினமும் 84,438 பெண்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இத்துடன் இன்று தொடங்கும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகைக்காக ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்களுடன் ஆண் ஒருவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.