குறியீட்டுப் படம்
கவஹாத்தி: அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சைராங் - புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைக் கூட்டம் மீது மோதியதில் 7 யானைகள் உயிரிழந்தன, ஒரு யானை காயமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிசோரம் தலைநகர் ஐஸ்வால் அருகில் உள்ள சைராங்-கில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்ட சைராங் - புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 2.17 மணிக்கு அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள சாங்ஜுராய் என்ற கிராமத்தில் யானைக்கூட்டம் மீது மோதியது. இதில், 7 யானைகள் உயிரிழந்தன, ஒரு யானை காயமடைந்தது. முதலில் 8 யானைகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், ஒரு யானை உயிருடன் இருந்தது கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நாகான் கோட்ட வன அதிகாரி சுஹாஷ் கடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “உயிரிழந்த 7 யானைகளின் பிரதேப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. காயமடைந்த யானைக்கு உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த யானைகளின் உடல்கள் விபத்து நடந்த இடத்துக்கு அருகிலேயே தகனம் செய்யப்படும். இவ்விஷயத்தில் சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன’’ என தெரிவித்தார்.
இந்த விபத்தால் ரயிலின் ஐந்து பெட்டிகளும் இன்ஜினும் தடம் புரண்டன. எனினும், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் கபின்ஜல் கிஷோர் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘இந்த விபத்து யானைகள் கடந்து செல்லும் பாதையாக அறிவிக்கப்படாத ஒரு இடத்தில் நடந்துள்ளது. ரயில் ஓட்டுநர் யானைக் கூட்டத்தைக் கண்டதும் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார். இருப்பினும் யானைகள் மீது ரயில் மோதிவிட்டது.
விபத்தை அடுத்து, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் பொது மேலாளரும் லும்டிங் கோட்ட மேலாளரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். குவாஹாட்டி ரயில் நிலையத்தை தொடர்பு கொள்ள 0361-2731621 / 2731622 / 2731623 ஆகிய உதவி எண்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
குவாஹாட்டியில் இருந்து சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் உள்ள காலி இருக்கைகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். தடம் புரண்ட பெட்டிகள் இல்லாமல் ரயில் இன்று காலை 6.11 மணிக்கு குவாஹாட்டி நோக்கி புறப்பட்டுச் சென்றது. குவஹாட்டியில் ரயிலுடன் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு அவற்றில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின் ரயில் தனது பயணத்தைத் தொடரும்’’ என்று கூறினார்.