

வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி, சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த தகவல் வெளியானதை அடுத்து, டாக்காவில் ‘புரோதோம் அலோ’ நாளிதழ் அலுவலகத்தை கலவரக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். ( உள்படம்) சுட்டுக் கொல்லப்பட்ட ஹாடி.படம்: பிடிஐ
டாக்கா: வங்கதேசத்தில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்துக்களை குறிவைத்து கலவரம் பரவுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
வங்கதேச அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதை தொடர்ந்து, பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
வங்கதேசத்தில் 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) என்ற மாணவர் தலைவர் களமிறங்கினார். இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவரான இவர், கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை வழிநடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவர்.
இந்நிலையில், டாக்காவில் கடந்த 12-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கிய இவரை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள், தலையில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு டாக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த 13-ம் தேதி ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷெரீப் உஸ்மான் ஹாடி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்த தகவல் வெளியானதை அடுத்து, கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி டாக்கா உட்பட பல்வேறுபகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல பகுதிகளில் மாணவர்கள்வன்முறையில் ஈடுபட்டனர். ‘புரோதோம் அலோ’, ‘டெய்லி ஸ்டார்’ ஆகிய நாளிதழ் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சட்டேகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணை தூதரின் வீடு மீது சிலர் கல்வீசி தாக்கினர்.
இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, அவர்களை தடுத்து நிறுத்தினர். அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான இடங்கள் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்துக்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்து இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். மைமன்சிங் மாவட்டம் பலுகா பகுதியை சேர்ந்தவர் தீபு சந்திர தாஸ் (30). இவர் தங்களது மதத்தை அவமதித்ததாக கூறி 18-ம் தேதி இரவு அவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்தது. இது சிறுபான்மை இந்துக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு முகமது யூனுஸ் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ‘வங்கதேசத்தில் வன்முறைக்கு இடமில்லை.
இந்த கொடூரமான குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்’ என்று அரசு உறுதி அளித்துள்ளது. ‘இந்த இக்கட்டான நேரத்தில், வன்முறை மற்றும் வெறுப்பை நிராகரிப்பதன் மூலம் தியாகி ஹாடிக்கு மரியாதை செலுத்துமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று அரசு தெரிவித்துள்ளது. ஹாடி உயிரிழப்பு காரணமாக, வங்கதேசத்தில் இன்று தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. வங்கதேச தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டதும் சுட உத்தரவு: ஹாடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை வங்கதேச காவல் துறை தீவிரமாக தேடி வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்ய இந்தியாவின் உதவியையும் அந்நாட்டு அரசு நாடியுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு: வங்கதேசத்தின் ஜலோகதி மாவட்டம் நல்சிட்டி பகுதியில் கடந்த 1994-ல் பிறந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிராக தீவிர நிலைப்பாடு கொண்டவராக இருந்தார். இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி ‘அகண்ட வங்கதேசம்' உருவாக்கப்பட வேண்டும் என்று முழங்கி வந்தார்.
இதுதொடர்பான வரைபடங்களையும் பரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஹாடி உடல் நேற்றுமாலை சிங்கப்பூரில் இருந்து டாக்கா கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. வங்கேதசத்தில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.