இந்தியா

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனுக்கள்: அரசியல் சாசன அமர்வில் ஏப்.7 முதல் விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் அனைத்து வயது பெண்​களும் சென்று வழிபட அனு​ம​தி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை 9 நீதிப​தி​கள் கொண்ட அரசி​யல்​சாசன அமர்வு முன்பு ஏப்.7-ம் தேதி தொடங்​கும் என உச்​ச நீதி​மன்​றம் அறி​வித்​துள்​ளது. மறு ஆய்வு மனுக்​கள் மீதான எழுத்​துப்​பூர்வவாதங்​களை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

          

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் சென்று வழிபட அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து, மத்​திய அரசு உள்​ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து 66 மறுஆய்வு மனுக்​கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்​ச நீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிபதி ஜோய்​மால்யா பக்சி அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று விசா​ரணைக்கு வந்தன.

மறுஆய்வு மனுக்​களைப் பரிசீலித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் அனைத்து வயது பெண்​களும் சென்று வழிபட அனு​ம​தி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்த மறுஆய்வு மனுக்​கள் மீதான விசா​ரணை 9 நீதிப​திகள் கொண்ட அரசி​யல்​சாசன அமர்வு முன்பு ஏப்.7-ம் தேதி தொடங்​க உள்ளது.

ஏப்.22-ல் விசாரணை முடிவடையும்: ஏப்.7, 8-ம் தேதி​களில் தீர்ப்பை எதிர்க்​கும் தரப்​பினரின் வாதங்​களும், ஏப்​ரல் 14, 16-ம் தேதிகளில் தீர்ப்​புக்கு ஆதர​வான மனு​தா​ரர்​களின் வாதங்​களும் கேட்​கப்​படும். பின்​னர் இரு தரப்​பிலும் விளக்க வாதங்​கள் ஏப்.21-ம் தேதி கேட்​கப்​பட்​டு, 22-ம் தேதி விசா​ரணை நிறைவடையும்.

ஒருங்​கிணைப்பு வழக்​கறிஞர்களாக மறுஆய்வு மனு​தா​ரர்​கள் சார்​பில் கிருஷ்ணகு​மார் சிங்​கும், மறுஆய்வு மனுக்​களை எதிர்ப்​போர் தரப்​பில் ஷாஷ்வதி பரி​யும் நியமிக்​கப்​படு​கின்​றனர்.

மறுஆய்வு மனுக்​கள் மீதான எழுத்​துப்​பூர்வ வாதங்​களை மார்ச் 14-ம் தேதி தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த வழக்​கில் நீதி​மன்​றத்துக்கு உதவ மூத்த வழக்​கறிஞர்​கள் கே.பரமேஷ்வர், சிவம் சிங் ஆகியோர் நியமிக்​கப்​படு​கின்​றனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT