புதுடெல்லி: தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகளில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தவிர மேலும் 4 அணு உலைகள் ரஷ்யா உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன.
கூடங்குளத்தின் 3-வது அணு உலைக்கு ஆரம்ப கட்ட நிரப்புதலுக்கான அணு எரிபொருளின் முதல் தொகுதியை டெலிவரி செய்துள்ளதாக ரஷ்ய அரசின் அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் தெரிவித்துள்ளது.ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் நோவோசி பிர்ஸ்க் கெமிக்கல் கான்சென்ட் ரேட்ஸ் ஆலையில் தயாரிக்கப் பட்ட இந்த எரிபொருளை ரோசாட்டம் அணு எரிபொருள் பிரிவால் இயக்கப்படும் ஒரு சரக்கு விமானம் டெலிவரி செய்துள்ளது.
இது தொடர்பாக ரோசாட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது அணு உலைகளுக்கு முதல்கட்ட நிரப்புதலில் தொடங்கி அணு உலையின் உற்பத்தி காலம் முழுவதும் அணு எரிபொருள் வழங்க 2024-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன் அடிப்படையில் ரஷ்யாவில் இருந்து 7 சரக்கு விமானங்கள் மூலம் எரிபொருள் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. இதில் முதல் தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.