நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதியாண்டில் உள்கட்டமைப்பு துறை ஒதுக்கீடு ரூ.11.2 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது இது மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் கூறுகையில், ‘‘கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த பொது மூலதனச் செலவினம், பலமடங்கு உயர்ந்து நடப்பு 2025-26 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.11.2 லட்சம் கோடியை எட்டியது. இந்த வளர்ச்சியை தொடரவும், உள்கட்டமைப்பு பணிகளை மேலும் விரைவுபடுத்தவும் 2026-27 நிதியாண்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ.12.2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வசமுள்ள நிலம் மற்றும் சொத்துகளை விற்று நிதி திரட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், பிரத்யேக ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் நிறுவப்படும். மேலும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையில், உள்கட்டமைப்பு அபாய உத்தரவாத நிதியம் உருவாக்கப்படும்" என்றார்.