ஆராதனா தாஸ்
புவனேசுவரம்: ஒடிசா பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், ரூ.95 லட்சம் மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. ஒடிசா மாநில உள்துறை கூடுதல் செயலராக பணியாற்றி வருபவர் ஆராதனா தாஸ்.
இவர் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் குமார் பவ்சிங்கா என்ற மாற்றுத் திறனாளியிடம், கட்டாக் மேம்பாட்டு ஆணைய பகுதியில் நிலம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.95 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நாட்களாகியும் நிலம் வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித்தராமலும் ஆராதனா காலம் கடத்தி வந்துள்ளார். இதையடுத்து கட்டாக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ரூ.95 லட்சம் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்: பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கமல் குமாரை, ஆராதனா தாஸ் தரக்குறைவாகப் பேசியதோடு, அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆராதனா தாஸ் விசாரணைக்குச் சரி வர ஒத்துழைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி என்பதால், அவர் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மாநில உள்துறை, பொது நிர்வாகத் துறைக்கு காவல் ஆணையரகம் கடிதம் எழுதியுள்ளது. உயர்மட்ட அரசு அதிகாரி ஒருவர் மீது எழுந்துள்ள இந்த மோசடிப் புகார் ஒடிசா அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.