புதுடெல்லி: நாட்டில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்து தேசிய சைபர் குற்றம் இணைய தளத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு மோசடிகள் மூலம் இந்தியர்கள் ரூ.52,976 கோடியை இழந்தனர். கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டம், டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடி, வங்கிகளின் பெயர்களில் நடந்த மோசடி, சைபர் குற்றங்கள் மூலம் இந்த மோசடிகள் நடைபெற்றன.
கடந்தாண்டில் மட்டும் ரூ.19,812 கோடியை இந்தியர்கள் இழந்தனர். கடந்த 2024-ம் ஆண்டில் சுமார் ரூ.23 கோடி, 2023-ல் ரூ.7 ஆயிரம் கோடி, 2002-ல் ரூ.2 ஆயிரம் கோடி, 2021-ல் ரூ.552 கோடி, 2020-ல் ரூ.9 கோடியையும் இந்திய மக்கள் இழந்தனர்.
கடந்தாண்டில் மகாராஷ்டிரா வில் சைபர் மோசடி புகார்கள் அதிகளவில் பதிவாயின. இங்கு ரூ.3,203 கோடியை மக்கள் இழந்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகா ரூ.2,413 கோடி, தமிழகம் ரூ.1,897 கோடி, உ.பி. ரூ.1,443 கோடி, தெலங்கானா ரூ.1,372 கோடி என மொத்தம் ரூ.10,000 கோடிக்கு மேல் இழந்துள்ளது.
நாட்டில் நடைபெற்ற மொத்த மோசடியில், இந்த 5 மாநிலங்களில்தான் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மோசடிகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ரூ.1.312 கோடி, டெல்லி ரூ.1,163 கோடி, மேற்கு வங்கம் ரூ.1073 கோடியை இழந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.