புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஜோன்பூர் மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகள் இணையதள செயல்பாட்டில் இருந்தாலும் அவை களத்தில் இல்லை. இவற்றைக் கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்ய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் ஜோன்பூர் மாவட்டத்தில் 5 அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவை களத்தில் இல்லை என்றாலும், அரசுப் பதிவுகளில் அவை செயல்பாட்டில் உள்ளதாகக் காட்டப்படுகின்றன. இந்த 5 பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை யாராவது கண்டுபிடித்துக் காட்டினால், எனது சம்பளத்திலிருந்து ரூ.1 லட்சம் பரிசு வழங்குகிறேன்.
நகரக் கல்வி அதிகாரி ஒருவரின் கடிதப்படி, தல்கர் டோலா தொடக்கப் பள்ளி, மிசிர்பூர் பெண்கள் தொடக்கப் பள்ளி, கடான் அர்சானி கூட்டுப் பள்ளி, உருது பஜார் தொடக்கப் பள்ளி மற்றும் பாக் ஹாஷிம் தொடக்கப் பள்ளி ஆகியவை அந்த 5 பள்ளிகளாகும். இவை அனைத்தும் அரசு இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன, ஆனால், குறிப்பிடப்பட்ட இடங்களில் அவை தற்போது இல்லை. அங்கு ஆசிரியர்களோ, குழந்தைகளோ அல்லது கட்டிடங்களோ இல்லை.
உ.பி.-யில் பள்ளி கட்டிடங்கள் இருந்தும் அவை மோசமான நிலையில் இருப்பதையும், உள்ளே குப்பைகள் கொட்டிக் கிடப்பதையும், கழிப்பறைகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதையும் நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டி உள்ளேன். இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். இருப்பிடமே இல்லாத இந்த 5 பள்ளிகள் ஏன் இன்னும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE Plus) இணையதளத்தின்படி, செயல்பாட்டில் உள்ளதாகக் காட்டப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் உ.பி. தலைவர் பங்கஜ் சிங், நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியின் சிதிலமடைந்த நிலையைக் காட்டும் வகையில் ஒரு காணொளியை வெளியிட்டார். இருப்பினும், அப்பள்ளியைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.