கோப்புப்படம்
அமராவதி: ஆந்திராவில் பழங்குடியினரின் வசதிக்காக வனப்பகுதிகளில் 905 கி.மீ. தொலைவுக்கு தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது என்று துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘வனத்தாய் மார்கம்’ திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்காக ஆந்திராவின் மலைப்பகுதிகளில் குக்கிராமங்களுக்கும் தார் சாலை வசதி செய்ய திட்டமிடப்பட்டது.
மொத்தம் 2,310 கி.மீ தொலைவுக்கு தார் சாலைகள் அமைக்க ரூ.2,078 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் இதுவரை 905 கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலைகள், காடுகள், மேடு பள்ளங்களை சரிசெய்து வாகனங்கள் எவ்வித சிரமமும் இன்றி செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.1,005 கோடி செலவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.