மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக 59 எம்எல்ஏ.க்கள், ஆதரவுடன் போர்க்கொடி தூக்கிய ரிதப்ரதா பானர்ஜி எதிர்கட்சி தலைவராகியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்தது. இதனால் மூத்த தலைவர்கள் பலர் தங்கள் கட்சி பதவிகளை ராஜினாமா செய்தனர். வெற்றி பெற்ற திரிணமூல் எம்எல்ஏ.க்கள் பாஜக.வுக்கு தாவ முயன்றனர். இவர்களில் பலர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. இதனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருபவர்கள் யாரையும் சேர்க்க வேண்டாம் என பாஜக கூறிவிட்டது.
தேர்தல் முடிவுக்குப் பின் கடந்த மாதம் 6ம் தேதி மம்தா கூட்டிய திரிணமூல் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 69 பேர் மட்டுமே பங்கேற்றனர். கடந்த 19ம் தேதி கூட்டிய கூட்டத்தில் இந்த எண்ணிக்கை 64-ஆக குறைந்தது, கடந்த 31ம் தேதி கூட்டிய கூட்டத்தில் 19 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சோவன்தேப் சட்டோபாத்யாய் என்பவரை எதிர்க்கட்சி தலைவராக்க மம்தா பானர்ஜி முடிவு செய்து அதற்கான கடிதத்தை சட்டப்பேரவையில் அளித்தார். ஆனால் அதில் உள்ள ஆதரவு எம்.எல்.ஏக்களின் கையெழுத்து தங்களுடையது அல்ல போலியாக போடப்பட்டது என ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாகா என்ற 2 எம்.எல்.ஏக்கள் புகார் கூறினார். இவர்கள் மம்தாவுக்கு எதிராக மற்ற எம்எல்ஏக்களை திரட்டி தனி அணி உருவாக்கினர். இதையடுத்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் திரிணமூல் எம்.எல்.ஏ.க்களின் பலம் 78-ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் திரிணமூல் கட்சியில் மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள 59 எம்எல்ஏ.க்கள் ஒன்றாக இணைந்து ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்க வேண்டும் என சட்டப் பேரவையில் சபாநாயகர் ரதிந்ரா போஸை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்ததையடுத்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கான அறை சாவி ரிதப்ரதா பானர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து ரிதப்ரதா பானர்ஜி கூறுகையில், "எதிர்க்கட்சியின் தலைமை ஆலோசகராக மம்தா பானர்ஜி இருக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுப்போம்" என்றார்.
பாஜக மீது குற்றச்சாட்டு: கொல்கத்தாவில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், "மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியை உடைத்த பாஜக, அதேவேலையை மேற்கு வங்கத்தில் செய்கிறது. இதுதான் ஜனநாயகமா ?" என்றார்.