

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 28.25 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ3,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிப்படி முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ‘அன்னபூர்ணா யோஜனா' திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: அன்னபூர்ணா திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இணைய தளத்தில், கடந்த மூன்று நாட்களில் 28,25,769 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதமும், இரட்டை இன்ஜின் அரசின் அர்ப்பணிப்பும் ரூ.3,000 நிதியுதவி வழங்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை உறுதி செய்துள்ளது.
புதிய விண்ணப்பங்கள் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படும். அடுத்த மூன்று மாதங்களில் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு சரிபார்ப்பு முடிந்ததும், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.3,000 நேரடியாகச் செலுத்தப்படும். தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் இந்த பலனைப் பெறுவதை உறுதி செய்வதே எங்களின் இலக்கு.
இந்தத் திட்டம் பெண்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. சமூகத்துக்கு பெண்கள் ஆற்றிய பங்களிப்பு மிகவும் அளப்பரியது. குறிப்பாக, மேற்கு வங்கம் ராணி ராஷ்மோனி முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாதங்கினி ஹஸ்ரா வரை பல பெண் ஆளுமைகள் வாழ்ந்த பூமி. ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும் சமூக இயக்கங்களில் பெண்கள் முன்னோடிகளாக பங்காற்றியுள்ளனர்.
இலவச பேருந்து..: பெண்களுக்கான மாநில அரசின் இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முன் முயற்சிகள் பெண்களின் நலனில் அரசுக்கு இருக்கும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.