திருவனந்தபுரம்: வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக கேரளா முழுவதும் பல பாம்புக்கடி சம்பவங்களும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான வழிகாட்டுதல்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு பகுதிகளில் பாம்புக்கடி தொடர்பான ஆறு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 19 அன்று, திருச்சூரில் இரண்டு சிறுவர்கள் வீட்டில் விளையாடியபோது, அவர்களை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. அதில் தம்பி உயிரிழந்த நிலையில், அண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோழிக்கோடு மாவட்டத்தின் குட்டியாடி பகுதியில் சிறு குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வீட்டுக்குள் ஐந்து கட்டுவிரியன் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, இதுபோன்ற சூழலைக் கையாள்வதற்காகச் சுகாதாரத் துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாகவே, வெப்பத்தைத் தாங்க முடியாமல் பாம்புகள் வீடுகள் உள்ளிட்ட குளிர்ந்த இடங்களைத் தேடி வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் அளிக்கப்படும் முதலுதவியும், துரிதமான மருத்துவச் சிகிச்சையும் உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்று அவர் கூறினார்.
மேலும், தாலுகா அளவிலான அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புக்கடிக்கு எதிரான விஷமுறிவு மருந்து (Anti-snake venom) கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நோயாளியின் அறிகுறிகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், உரிய மருத்துவ நெறிமுறைகளைப் பின்பற்றியே சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று கூறிய அவர், மருத்துவமனைகள் இந்த வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பாம்புகள் வீட்டுக்குள் நுழைவதைத் தடுக்கவும், பாம்புக்கடி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பாம்புக்கடியைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
• கதவுகளையும் ஜன்னல்களையும் மூடியே வைத்திருக்கவும்.
• பாம்புகள் வீட்டுக்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிய வகையில் இடைவெளிகளை அடைத்துவிடவும்.
• வீட்டுக்கு வெளியே அல்லது தரையில் படுப்பதைத் தவிர்க்கவும்.
• படுக்கைகள் மற்றும் கொசுவலைகளைப் பயன்படுத்தவும்.
• உங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்கவும்; குப்பைகளை அகற்றுவதுடன், புற்களையும் புதர்களையும் வெட்டிச் சீர்செய்யவும். விறகுகள் அல்லது துணிகளை வீடடுக்கு மிக அருகில் குவித்து வைக்க வேண்டாம்.
• வீட்டைச் சுற்றியுள்ள பொந்துகளை அடைத்துவிடவும்.
• இரவு நேரங்களில் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யவும்.
• இருட்டிய பிறகு வெளியே செல்லும்போது கையில் டார்ச் விளக்கை எடுத்துச் செல்லவும்.
• புதர்கள் நிறைந்த பாதைகளின் வழியாக நடப்பதைத் தவிர்க்கவும்.
• பாதுகாப்பான காலணிகளை அணிந்து கொள்ளவும்.
• படுக்கைகள், போர்வைகள், காலணிகள், துணிகள், பைகள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை நன்கு சோதித்துப் பார்க்கவும்.
• எங்கேயும் பாம்பு தென்பட்டால், அதை நீங்களே பிடிக்க முயற்சிக்க வேண்டாம். புகாரளியுங்கள் அல்லது 'சர்ப்னா' செயலியைப் பயன்படுத்துங்கள்
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
• பாதிக்கப்பட்டவரை அமைதியாக வைத்திருங்கள்; பதற்றத்தைத் தவிருங்கள்.
• உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்துங்கள். குறிப்பாக, பாம்பு கடித்த பகுதியில் அசைவுகளைத் தவிர்க்கவும்.
• பாதிக்கப்பட்டவரை ஓடவோ அல்லது நடக்கவோ அனுமதிக்காதீர்கள்.
• காயம் உள்ள இடத்தில் இறுக்கமான கட்டுகளைப் போடாதீர்கள்.
• பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
• பாம்பைப் பிடிக்கவோ அல்லது கொல்லவோ முயற்சிக்காதீர்கள்