கோப்புப் படம்

 
இந்தியா

“இந்த ஆபத்தை முன்னரே கணித்தவர் ஸ்டாலின்” - தொகுதி மறுவரையறை குறித்து ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை

டெக்ஸ்டர்

ஹைதராபாத்: மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து தென்னிந்திய மாநிலங்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

          

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தமிழக முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு, அவர் கூறியிருப்பதாவது: “அன்புள்ள ஸ்டாலின், இந்த ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தென்னிந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து மாநாட்டை ஒருங்கிணைத்த முதல் தலைவர்களில் நீங்களும் ஒருவர்.

நமது அரசியல் உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். டெல்லியில் நமது குரலைப் பாதுகாக்க வேண்டும். இந்த மிகச் சிறப்பான நாளில், "கற்பி, போராடு, ஒன்றுசேர்" என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் தாரக மந்திரத்தை உத்வேகமாக எடுத்துக்கொள்வோம். ஒன்றாக அணிவகுப்போம்” என்று தெரிவித்துள்ளார்,

அத்துடன் மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தையும் ரேவந்த் ரெட்டி அதில் இணைத்துள்ளார். அதில், "குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தென்னிந்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், தென்னிந்தியாவின் அரசியல் குரலுக்கும் எதிரானது என்று அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒரு நடுநிலையான தீர்வை எட்ட வேண்டும் என்று கூறியுள்ள ரேவந்த், மக்கள் தொகை மற்றும் அந்தந்த மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு ஆகிய இரண்டையும் சமமாகப் பாவிக்கும் 'கலப்பு மாதிரி' முறையைப் பரிந்துரைத்துள்ளார். 

தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தென்னிந்திய மாநிலங்கள் ஏற்கனவே போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், ரேவந்த் ரெட்டியின் இந்தக் கடிதம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT