இந்தியா

ஞானேஷ் குமாரின் பதவி நீக்கம் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரள சட்டப்பேரவையின் 16-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவை விதி 118-ன் கீழ் முதலமைச்சர் வி.டி. சதீசன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோருதல் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தீர்மானத்தை எதிர்த்தனர்.

அந்தத் தீர்மானத்தில், ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் குழுவை மறுசீரமைக்க வேண்டும்.

தற்போதைய 2023-ம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின்படி, தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியத் தலைமை நீதிபதி இந்தக் குழுவில் இடம்பெறவில்லை. எனவே, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறும் வகையில் தேர்வுக் குழுவை மறுசீரமைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, முதல்வர் வி.டி. சதீசன் தனது எக்ஸ் தளப் பதிவில், “வாக்களிக்கும் உரிமை நமது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். நமது குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை எந்த அமைப்பும் பலவீனப்படுத்த அனுமதிக்க முடியாது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு கேரளம் உறுதியாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT