புதுடெல்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பின் இரண்டு பிரதிநிதிகளை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று சந்தித்துப் பேசினார். இதன்மூலம் மத்திய அரசுக்கும் சிஜேபி கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
இந்த போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு, தடியடி, கைது நடவடிக்கைகள் நடந்தன.
டெல்லியில் இன்று பதற்றமான சூழல் ஏற்பட்டதால், பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து சிஜேபி செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் இன்று மதியம் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய சவுரவ் தாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்த பிறகு, அசுதோஷ் ரங்காவும் நானும் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் 10 நிமிடங்கள் சந்தித்தோம். கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நாங்கள் எழுத்துப்பூர்வமக சமர்ப்பித்துள்ள நிலையில், அவர் இது குறித்து கட்சிக்குள் பேசுவதாக உறுதியளித்துள்ளார். அதேவேளையில், பெருமளவிலான கைது நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் வருகின்றன’ என்று கூறினார்.
மேலும், ‘நானும் சவுரவ் தாஸும் இன்னும் நட்டாவின் இல்லத்தில் இருக்கிறோம். எங்களின் பின்வரும் கோரிக்கைகள் குறித்துத் தங்கள் தலைமையுடன் கலந்தாலோசிக்க நட்டா சிறிது அவகாசம் கோரியுள்ளார். நாங்கள் முன்வைத்த 3 கோரிக்கைகள்.
1) சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
2) தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
3) நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்தோ அல்லது கோரிக்கைகளில் ஏதேனும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது குறித்தோ அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சூழலில் "இனி முடிவு எடுக்க வேண்டியது அவர்கள்தான்" என்று சவுரவ் தாஸ் தனது பதிவில் குறிப்பிட்டார்.
சவுரவ் தாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அசுதோஷ் ரங்கா மற்றும் நான் மதியம் 12 மணி முதல் ஜே.பி. நட்டாவின் இல்லத்தில் இருக்கிறோம். தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து உரிய மட்டத்தில் ஆலோசிப்பதாக அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார். இருப்பினும், இதுவரை எந்தவொரு உறுதியான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான முறையில் போராடும் நாங்கள் ஓயமாட்டோம்’ எனத் தெரிவித்தார்.