

புது டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி நடத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் இன்று 5 ரயில் நிலையங்களை மூடியது. இதனால் டெல்லியின் பல மெட்ரோ நிலையங்களில் குழப்பமான சூழல் நிலவியதால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட் மற்றும் சேவா தீர்த் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.
டெல்லியின் மிக முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றான ராஜீவ் சவுக் மூடப்பட்ட நிலையில், அங்கே வந்த பயணிகள் மூடப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களுக்கு அருகே கூட்டம் கூட்டமாக நின்றனர். அந்த மெட்ரோ நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
அதேபோல படேல் சவுக் நிலையத்தில் இருந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சென்று கொண்டிருந்தவர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் லேசான தடியடி நடத்தினர்.
மண்டி ஹவுஸ் மற்றும் ராஜீவ் சவுக் மெட்ரோ நிலையங்களுக்குள் கூடிய போராட்டக்காரர்கள், "பாரத் மாதா கி ஜே" மற்றும் "வந்தே மாதரம்" போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
ராஜீவ் சவுக் நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, கைதட்டியபடியும் தேசபக்தி முழக்கங்களை எழுப்பியபடியும் முழக்கமிட்டனர். ஜன்பத் நிலையத்துக்கு வெளியே, மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் பிற பயணிகள் மூடப்பட்ட வாயில்களுக்கு அருகே காத்து கிடந்ததால், அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த 5 நிலையங்கள் மூடப்பட்டதால், அருகிலுள்ள பிற மெட்ரோ நிலையங்களுக்கு பயணிகள் நடந்தே சென்றனர். இன்னும் சிலர் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் வாடகைக் கார்கள் மூலம் பயணம் செய்தனர். இதன் காரணமாக இன்று டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.