கொல்கத்தா: மேற்குவங்கத்தின் 15 வாக்குச் சாவடிகளில் நேற்று மறுதேர்தல் நடைபெற்றது. அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
மேற்கு வங்கத்தில் கடந்த 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 29-ம் தேதி நடைபெற்ற இறுதிக் கட்ட தேர்தலின் போது மகரஹட் பஸ்சிம் மற்றும் டைமண்ட் ஹார்பர் தொகுதிகளின் 15 வாக்குச் சாவடிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து மகரஹாட் பஸ்சிம் தொகுதிக்கு உட்பட்ட 11 வாக்குச் சாவடிகள், டைமண்ட் ஹார்பர் தொகுதிக்கு உட்பட்ட 4 வாக்குச் சாவடிகளில் நேற்று மறு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மகரஹாட் பஸ்சிம் தொகுதியின் மறுவாக்குப் பதிவினை பார்வையிட பாஜக வேட்பாளர் கவுர் சுந்தர் கோஸ் சென்றார். ஏர்பூர் பகுதியில் அவரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
டைமண்ட் ஹார்பர் தொகுதிக்கு உட்பட்ட பால்டா பகுதியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படை வீரர்கள் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பலத்த பாதுகாப்பு 15 வாக்குச் சாவடிகளில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறும்போது, “பல்வேறு வாக்குச் சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸார் முறைகேடுகளில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. எனினும் 15 வாக்குச் சாவடிகளில் மட்டுமே மறுதேர்தல் நடைபெறுகிறது. கூடுதல் வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி பன்ஜா கூறும்போது, “பாஜகவின் அழுத்தத்தால் 15 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது’’ என்று தெரிவித்தார்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 15 வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
திரிணமூல் காங்கிரஸார் மிரட்டுவதாக புகார்: சவுத் 24 பர்கானாஸ் மாவட்டம், பால்டா பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று சாலையில் திரண்டு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு பெண் கூறும்போது, “திரிணமூல் காங்கிரஸார் எங்கள் வீடுகளுக்கு வந்து மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் பகுதிகளுக்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
மற்றொரு பெண் கூறும்போது, “திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த இஸ்ரபீல், சுஜாதிதீன் ஷேக் ஆகியோர் எங்கள் பகுதி மக்களை மிரட்டுகின்றனர். அவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “பால்டா பகுதியில் சிலர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்கள் வந்துள்ளன. அவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால்டா பகுதியில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.