இந்தியா

எக்ஸ் தளத்தின் க்ரோக் ஆபாச பட விவகாரம்: 3,500 பதிவுகள் நீக்கம்; 600 கணக்குகள் முடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: க்​ரோக் ஆபாச பட விவ​காரத்​தில் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் இருந்து 3,500 பதிவு​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. 600 கணக்​கு​கள் முடக்​கப்​பட்டு உள்​ளன.

அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​குக்கு சொந்​த​மான எக்ஸ் சமூக ஊடகத்​தில் பிரிமி​யம் மற்​றும் பிரிமி​யம் பிளஸ் சந்​தா​தா​ரர்​களுக்கு க்ரோக் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வசதி வழங்​கப்​படு​கிறது. சிலர் எக்ஸ் தளத்​தில் போலி கணக்​கு​களை உரு​வாக்கி க்ரோக் ஏஐ மூலம் பிரபலங்​கள், பெண்​கள், சிறார்​களின் புகைப்​படங்​களை ஆபாச​மாக மாற்றி வெளி​யிடு​வ​தாக புகார்​கள் எழுந்தன.

இதுதொடர்​பாக எக்ஸ் தளத்​தில் தலைமை பொறுப்பு அதிகாரிக்கு, மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்​பத் துறை கடந்த 2-ம் தேதி நோட்​டீஸ் அனுப்​பியது. அதில், “க்​ரோக் ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஆபாச படங்​கள், வீடியோக்​களை 72 மணி நேரத்​தில் நீக்க வேண்​டும். இந்​திய சட்ட விதி​களுக்கு உட்​பட்டு நடக்க வேண்​டும். இதுதொடர்​பான அறிக்​கையை சமர்ப்​பிக்க வேண்டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலை​தளம் சார்​பில் மத்​திய மின்னணு, தகவல் தொழில் ​நுட்ப துறை​யிடம் விரி​வான அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து மத்​திய அரசு வட்டாரங்கள் கூறும்​போது, “எக்ஸ் சமூக வலைதள நிர்​வாகம் தனது தவறுகளை ஒப்​புக்கொண்​டிருக்​கிறது.

இந்​திய சட்ட விதி​களை மதித்து நடக்க அந்த நிர்​வாகம் உறுதி அளித்​திருக்​கிறது. க்ரோக் ஏஐ தொழில்​நுட்​பத்​தால் உருவாக்கப்பட்ட 3,500 ஆபாச பதிவு​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. இந்த பதிவு​களை வெளி​யிட்ட 600 எக்ஸ் தள கணக்​கு​கள் முடக்கப்பட்டு உள்​ளன” என்று தெரி​வித்​தன. இந்​தியா மட்​டுமன்றி பிரிட்​டன், ஐரோப்​பிய ஒன்​றி​யம் ஆகிய​வை​யும் க்ரோக் ஏஐ தொழில் நுட்​பம் தொடர்​பாக ஆட்​சேபங்​களை எழுப்பி உள்​ளன.

இதுதொடர்​பாக எக்ஸ் சமூக வலை​தளம் வெளி​யிட்ட பதி​வில், “க்ரோக் ஏஐ மூலம் ஆபாச படங்​களை உரு​வாக்கி வெளி​யிட்​டால் சம்​பந்​தப்​பட்ட எக்ஸ் சமூக வலைதள கணக்​கு​கள் நிரந்​தர​மாக முடக்கி சட்​டரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும்​” என்​று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT