ஜஷ்பூர்: சத்தீஸ்கரில் விரைவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனது உறவினரின் 4 வயது மகனைக் கொலை செய்து, உடல் உறுப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம், ஜஷ்பூர் மாவட்டம், லோதெனாபாத் மஹுவா கிராமத்தில் உள்ள வயல்வெளியில், ஒரு பள்ளத்தில் சாக்குப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பசுதேவ் என்பவரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து, ஜஷ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லால் உமேத் சிங் கூறியதாவது: சன்னா கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ராம்ஜீத் என்பவரது வீட்டுக்கு, அவரது உறவினரான பசுதேவ், அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், ராம்ஜீத்தின் 4 வயது மகன் திடீரென காணாமல் போனார். குடும்பத்தினர் சிறுவனைத் தேடியபோது, மக்காச்சோள வயலுக்கு அருகே பள்ளத்தில் போர்வை மற்றும் கம்பளியால் சுற்றப்பட்டு, சாக்குப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடலை ராம்ஜீத் கண்டெடுத்தார்.
இதுதொடர்பாக, போலீஸார் நடத்திய விசாரணையில், கொர்ராபாத் கிராமத்தைச் சேர்ந்த பசுதேவ் பிடிபட்டார். விசாரணையின்போது, பசுதேவ் கூலி வேலை மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால், விரைவாக அதிகப் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கான வழிகளை சமூக வலைதளங்களில் தேடியபோது், சிறு குழந்தைகளின் உடல் உறுப்புகளை அகற்றி விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 5-ம் தேதி ராம்ஜீத்தின் மகனை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற பசுதேவ், சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்துள்ளார்.போதையில் சிறுவன் தூங்கிய பிறகு அவனை கொலை செய்து விட்டு, பின்னர் உடலில் இருந்து சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் கண்களை அகற்றி உள்ளார். பின்னர், சிறுவனை சாக்குப் பையில் அடைத்து, வயல்வெளியில் உள்ள பள்ளத்தில் போட்டு மூடியது தெரியவந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.