புதுடெல்லி: நீட் முதுநிலை தேர்வு கட் -ஆஃப் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு, தேசிய தேர்வுகள் வாரியம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் முதுநிலை தேர்வு கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதை எதிர்த்து, சமூக ஆர்வலர் ஹரிசரண் தேவ்கான் உள்ளிட்ட நால்வர் சார்பில் வழக்கறிஞர் நீமா பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில்,”தேசிய தேர்வுகள் வாரியம் கடந்த மாதம் 13ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், நீட் முதுநிலை தேர்வு கட் -ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியத்துக்கும் கீழே குறைத்துள்ளது. இதனால் மருத்துவ கல்வித் தரம் பாதிக்கப்படும். எனவே இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுநல மனுவுக்கு பதில் அளிக்குமாறு தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.