சித்தூர்: விக்சித் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களை இலவசமாக பராமரிக்க தயாராக இருப்பதாக அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அரகொண்டாவில் நிறுவப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையின் சாதனையை பாராட்டி பேசினார். தனது சொந்த ஊர் மக்களுக்காக கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் இதுவரை 1,000 பேருக்கு மூட்டு அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசியதாவது: இந்த குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், மக்களுக்கு மருத்துவ துறையில் சேவை செய்ய வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தில் அப்போலோ மருத்துவமனையை தொடங்கினேன்.
தற்போது 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. 7 மருத்துவ கல்லூரிகள், சித்தூரில் அப்போலோ பல்கலைக்கழகம், செவிலியர் பயிற்சி கல்லூரி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.
மேலும் சித்தூர் அரசு மருத்துவமனையை 33 ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கு எடுத்து, தற்போது 650 படுக்கை வசதி கொண்ட அதிநவீன மருத்துவமனையாக இது செயல்பட்டு வருகிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு இதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கினார். இங்கு இலவசமாக மக்கள் மருத்துவ வசதியை பெற்று வருகின்றனர். ஆரோக்கியமான இந்தியா என்பது பெரு நகரங்களில் மட்டுமல்லாது குக்கிராமங்களிலும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து.
சுகாதாரமான இந்தியாவுக்காக விக்சித் பாரத் திட்டத்தின் கீழ் அப்போலோ தனது சேவையை நாடு முழுவதும் அமல்படுத்த நினைக்கிறது. இது தொடர்பாக நான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 2 திட்டங்களை முன்வைத்தேன்.
அதில் முதலாவது, வெளிநாட்டவர்கள், அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள், நம் நாட்டுக்கு வரும்போது, மருத்துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றை அப்போலோவில் எடுத்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு விரைந்து மருத்துவ சேவையை செய்து தருவோம். அடுத்ததாக, விக்சித் பாரத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களை அப்போலோவுக்கு சில ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கினால், அவற்றை நவீனப்படுத்தி, மக்களுக்கு இலவசமாக சிறந்த மருத்துவ சேவையை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.