சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக, தமிழகம் முழுவதும் அவருக்கும் அவருடன் தொடர்புடையவர்களுக்கும் சொந்தமான 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் சாலை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அரசுப் பணியிடங்களை நிரப்ப லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்று புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, மத்திய அரசின் அமலாக்கத் துறை 2 கடிதங்களை அனுப்பியது.
முதல் கடிதத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி அளவுக்கு ஒப்பந்த முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது. அதனுடன் 252 ஆதார ஆவணங்களும், 300 புகைப்படங்களும் இணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், 2-வது கடிதத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், நகரத் திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, மேற்கூறிய கடிதங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும் லஞ்சப் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்பேரில், பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக, கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை எதிர்த்து கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஹேமச்சித்ரா தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீஸார் 3 வாகனங்களில் வீட்டுக்குச் சென்றனர்.
வீட்டில் சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. சோதனை குறித்த தகவல் பரவியதால், அவரது வீட்டின் முன்பு திமுகவினர் திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.மணிவண்ணனின் அலுவலகத்திலும் ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அப்போது மணிவண்ணன் வீட்டில் இல்லை. அங்கிருந்தவர்களிடம் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. வடவள்ளியில் மணிவண்ணனின் உதவியாளர் வீட்டிலும் சோதனை நடந்தது.
நாமக்கல் எம்.ஜி. நகரில் உள்ள திமுக முன்னாள் எம்எல்ஏ பெ.ராமலிங்கத்தின் வீட்டிலும் சோதனை நடந்தது. துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையிலான போலீஸார், வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
மேலும், கே.என்.நேருவின் உறவினர் துரை வீட்டுக்குச் சென்ற போலீஸார், வீடு பூட்டப்பட்டிருந்ததால் அங்கு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். அவர் சிங்கப்பூரில் இருப்பதாகவும், நவம்பர் 13-ம் தேதி திரும்புவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்எல்ஏ நந்தகுமாரின் காட்பாடி வீட்டில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். காட்பாடியில் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான குழுவினர் 3 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளின் போது வழக்குடன் தொடர்புடைய 170 ஆவணங்கள், 13 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
திசை திருப்ப சோதனை
சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனது வீட்டில் இருந்து ஆவணங்கள் எதையும் கைப்பற்றவில்லை. எனது சகோதரர் மணிவண்ணனுக்குச் சொந்தமான 2 மடிக் கணினிகளைப் போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் எங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளைச் சட்டரீதியாக எதிர்கொண்டதைப் போல, இப்போதும் சட்டப்படி எதிர்கொள்வோம். என்னை முடக்கினாலும், தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏராளமான திமுக தொண்டர்கள் உள்ளனர். திமுகவை யாராலும் முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.