புதுடெல்லி: டெல்லி உட்பட பல்வேறு நகரங்களின் காற்று மாசு பிரச்சினை குறித்து மக்களவையில் விவாதிக்க தயார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 10-வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. மக்களவை கூடியதும், மறைந்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காற்று மாசு பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசும்போது, “டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அவர் கூறும்போது, “காற்று மாசு தொடர்பாக அவையில் விவாதம் நடத்த காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் யோசனை தெரிவித்துள்ளன. இதை ஏற்றுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
பாஜக எம்பி அனுராக் தாக்குர், தமிழகத்தின் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மக்களவையில் நேற்று எழுப்பினார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
உள்நாட்டில் விமான தயாரிப்பு: பிற்பகலில் மக்களவை கூடியபோது இண்டிகோ விமான சேவைகள் ரத்து விவகாரத்தை காங்கிரஸ் எம்பி இம்ரான் எழுப்பினார். இதற்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறும்போது, “இதைத் தொடர்ந்து உள்நாட்டில் பயணிகள் விமானங்களை தயாரிக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல கடந்த 2001-ல் நாடாளுமன்ற வளாக தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.