திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக திருமலையில் ‘தர்ம ரதம்’ என்னும் பெயரில் 50 பேட்டரி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன.
திருமலையில் ஆட்டோக்கள், ரேபிடோ உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், பக்தர்களுக்கு இலவச பேருந்து வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்தப் பேருந்துகள் எப்போது வரும்? எங்கு செல்லும்? என்பது குறித்து சமீபத்தில் ‘வெங்கடாத்ரி’ செல்போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இலவச பேருந்துகள் நின்று செல்லும் இடங்களில் பக்தர்களின் வசதிக்காக ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இந்த ஏற்பாடுகளைச் செய்ய ரேமாண்ட்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. ஏற்கெனவே உள்ள 5 பேருந்து நிறுத்தங்கள் உட்பட மொத்தம் 21 பேருந்து நிறுத்தங்கள் அதிநவீன வசதியுடன் இங்கு அமைக்கப்பட உள்ளன.