ஜனவரி 22, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.
2025-ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதையொட்டி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டமும் குவிந்தது.
2026 ஜூனில் ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து அரசியல் வட்டத்திலும், இந்து மதம் சார்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறாக ராமர் கோயில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பரபரப்பான பேசுபொருளாக இருக்க, ராமர் கோயில் காணிக்கை திருட்டு பின்னணி குறித்தும், அது ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வலைகள் குறித்தும் சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
வைரல் வீடியோவும் அகிலேஷின் கோரிக்கைக்கு கிடைத்த பலனும்!
இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு நடைபெறுவதாக அரசல் புரசலாகப் பேசப்பட்டுத்தான் வந்தது. இதனை பூதாகரமாக்கும் வகையில் ராமர் கோயில் காணிக்கை பணம் எண்ணும் குழு உறுப்பினர் மஹிபால் சிங், பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இணைத்து சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் வெளியிட்ட பதிவில், “இன்று உலகம் அறிந்து கொண்ட இந்தச் செய்தி, உண்மையில் மிகவும் பழையது. ‘ட்ரஸ்ட்’ (அறக்கட்டளை) என்றால் நம்பிக்கை. இந்த விவகாரத்தை அறக்கட்டளையே தீவிரமாக எடுத்துக் கொண்டு, நீதித் துறை விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து அயோத்தியில் உள்ள துறவிகள், இதர அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்தனர். இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் டாக்டர் ரஜ்னீஷ் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி விசாரணை நடத்த வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக, அறக்கட்டளை பரிந்துரையின்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு புகார்களை மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) உறுதி செய்து, கைது நடவடிக்கைகளும் நடந்தன.
அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் முன்னாள் வாகன ஓட்டுநர் டின்னு (எ) ராம் ஷங்கர் யாதவ், அறக்கட்டளை ஊழியர் அனுகல்ப் மிஸ்ரா, அவரது மைத்துனர் லவ்குஷ் மிஸ்ரா, டின்னுவின் மருமகன் மனிஷ் யாதவ், கருணேஷ் பாண்டே, ராம் ஷங்கர் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா மற்றும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணம் திருடுபோனது எப்படி?
ராமர் கோயில் வளாகம் முழுவதும் 40 முதல் 50 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன என்கிறது ஒரு செய்தி. அவற்றில்தான் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்துகின்றனராம். உண்டியல்கள் மூலம், மாதந்தோறும் சராசரியாக ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை காணிக்கை வருவதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர அதிக மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்ற நகைகள், விலையுயர்ந்த பொருட்களை தானமாக வழங்குபவர்களும், பெருந்தொகை வழங்குபவர்களும் நேரடியாக அறக்கட்டளை அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக் கொள்கின்றனர்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையானது காணிக்கை எண்ணும் பணியை பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்துள்ளது. காணிக்கை எண்ணும் குழுவில் ஒரு வங்கி ஊழியர், வாராணசியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அன்றாடம் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை பணம் ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட அறையில் எண்ணும் பணி நடைபெறுகிறது. இது கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. அதையும் மீறி காணிக்கைப் பணம் எப்படித் திருடு போனது என்று வரும் ஊடகத் தகவல்களை தொகுத்தால் நவீன ‘மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸ் எடுக்கலாம் போல் இருக்கிறது. அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.
ஜூன் 30-ம் தேதி நடந்த தீவிர விசாரணையில் வெளியான தகவல்கள் இவை என்று ஆங்கில ஊடகங்கள் பட்டியலிட்டுள்ளவை வருமாறு:
ராம்ஷங்கர் யாதவ் என்ற டின்னுவிடம்தான் கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள காணிக்கை எண்ணும் அறைக்கான சாவி இருந்துள்ளது.
பணத்தை திருடுவது ஒரு கூட்டு முயற்சியாகவே நடந்ததாக விசாரணையில் அவினாஷ் சுக்லா தெரிவித்ததாக தகவல். அதாவது ஒரு நபர் பணத்தை திருட மற்றவர்கள் அவரைச் சுற்றி அரண்போல் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
சிசிடிவி கேமராக்கள் எந்தெந்த பகுதியில் இருக்கும் என்பது நன்றாகவே தெரியும் என்பதால், அதிலிருந்து தப்பிப்பதையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
“அதுமட்டுமல்லாது கண்காணிப்பு அறையில் இருந்தவர்களும் கேமரா காட்சிகளை கண்காணிப்பதை அத்தனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை அது எங்களுக்கு சாதகமானது” என்று கைதானவர்கள் விசாரணையில் கூறியதாகவும் தெரிகிறது.
மேலும் திருடப்பட்ட காணிக்கை பணத்தை கோயில் வளாகத்தின் கழிவறைகளில் பதுக்கிவைத்ததாகவும் விசாரணையின் போது அவர்கள் தெரிவித்துள்ளனர். அறக்கட்டளைக்கு நெருக்கமானவர்கள் மீது எந்த சந்தேகப் பார்வையும் இருக்காது என்பதையும் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த கும்பமேளாவின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கும் பக்தர்கள் வருகை மிக மிக அதிகமாக இருந்தது, அந்த நேரத்தில் காணிக்கை திருட்டும் அதிகமாக நடைபெற்றது என்று விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டில் தொடர்புடையவர்களில் முதன்மை நபரான டின்னு எனும் ராம் ஷங்கர் யாதவ் (51) பற்றி பல முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேநீர் கடை நடத்திய இவர், பின் ஆட்டோ ஓட்டுநராக இருந்து, விஎச்பி நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார் என்பது வரை தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரைப் பற்றி ஊர்க்காரர்களே, அறக்கட்டளையிடம் புகார் கூறியதும் தற்போது தெரியவந்துள்ளது.
இவ்வாறாக திருட்டை மிக லாவகமாக ஒரு குழு போல் செயல்பட்டு அரங்கேற்றியுள்ளதாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உ.பி. அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்:
திருட்டு நடந்த விதம் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால், திருட்டுச் சம்பவம் பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கடத்தி வருகிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
ராமர் கோயில் காணிக்கை திருட்டு உ.பி. அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று பரவலாகப் பேசப்படும் நிலையில், என்ன மாதிரியான தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்று அலசுவோம்.
இந்தப் பிரச்சினையில் முதல் குரல் அகிலேஷ் யாதவிடம் இருந்து ஒலித்தாலும் கூட அதில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என எல்லா கட்சிகளும் சேர்ந்து கொண்டு பாஜகவை தாக்க ஆரம்பித்துள்ளன. அதுவும் பாஜகவின் ஆணி வேரில் தாக்குதலைத் தொடுத்துள்ளன.
பாஜகவின் அடிப்படை சித்தாந்தம் இந்து மத நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டது. அந்த நம்பிக்கைதான் அதன் அரசியலை காலங்காலமாக நிர்ணயிக்கிறது. அதுவும் உத்தரப் பிரதேச அரசியலைப் பொறுத்தவரை, பாஜக தனது ஆட்சி நிர்வாகத்தின் வெற்றியாக அயோத்தி, காசி விஸ்வநாதர் வழித்தடம், மகா கும்பமேளா மற்றும் சமயச் சுற்றுலா ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ள நேரத்தில் இந்த காணிக்கை திருட்டு சர்ச்சை எழுந்துள்ளது, ஆணி வேர் தாக்குதல் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
500 ஆண்டுகால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அயோத்தி ராமர் கோயில் நிறுவப்பட்டதை பாஜக பெருமிதத்துடன் சொல்லிவரும் வேளையில், பக்தர்களின் காணிக்கையில் நடந்துள்ள திருட்டு, அதன் மீதான எஸ்ஐடி விசாரணை, எஃப்ஐஆர், கைது நடவடிக்கைகள் பாஜக மீதான பார்வையை மாற்றக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.
ஏனெனில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளின்போது பக்தர்கள் ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி என்று ரூ.3,500 கோடி மதிப்பில் கோயில் அறக்கட்டளைக்கு அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றனர். அந்த நிதிக்கும், தற்போது காணிக்கையாக பெறப்பட்ட நிதிக்கும் தொடர்பு இல்லை. இரண்டும் வெவ்வேறு கணக்கு வழக்கு சார்ந்தது என்றாலும். அன்றாடம் கோயிலில் வசூலாகும் காணிக்கை திருட்டு விவகாரத்தால் கோயில் கட்டுமானத்துக்கு அளித்த நிதி மேலாண்மை மீதும் பக்தர்களுக்கு சந்தேகத்தை எழுப்பக்கூடும் என்று கூறப்படுகிறது.
உ.பி.யின் பாஜக முக்கிய தலைவர் ஒருவர், “ராம பக்தர்களுக்கு இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். இதை சரியாக அணுகி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் இது 2027 சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியிருப்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
அசராத ஆதித்யநாத்!
இந்நிலையில் எதற்கும் அசராத ஆளுமை கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், “இப்போது இந்துக்கள் மீது இத்தனை அக்கறையோடு பேசும் அகிலேஷ் யாதவ், ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி இயக்கத்துக்கும் ஆதரவு தந்து தன்னை ஒரு இந்து மதத் தலைவர் என்று நிரூபிக்கலாமே!
1990-ல் முலாயம் சிங் யாதவ் அரசு கர சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நினைவிருக்கிறதா?” என்று வினவியுள்ளார்.
அதுமட்டுமல்ல, “ராமர் இருப்பை சந்தேகத்துக்கு உள்ளாக்கியவர்கள், ராம பக்தர்களை இழிவுபடுத்தியவர்கள், பாபர் மசூதியை ஆதரித்தவர்கள் ராமர், ராமர் கோயிலைப் பற்றி எதுவுமே பேச தகுதி அற்றவர்கள்” என்று கூறி மிக நேர்த்தியாக நிலைமையை தற்காலிகமாகக் கையாண்டு வருகிறார்.
“பிஹாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக வாக்குத் திருட்டு பிரச்சாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சி தோற்றுத்தான் போனது. அதுபோலவே உ.பி. தேர்தலுக்கு முன்னர் ராமர் கோயில் காணிக்கை திருட்டை கையில் எடுத்துள்ளது. அங்கே காங்கிரஸ், இங்கே சமாஜ்வாதி. எதிரிகள் யாராக இருந்தாலும், குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் பாஜக அதிலிருந்து மீண்டும் வரும். தனிநபர்களின் குற்றங்களுக்கு கட்சியை, கட்சியின் கொள்கையை கேள்விக்கு உள்ளாக்க முடியாது,” என்கின்றனர் உ.பி. பாஜக அனுதாபிகள்.
இருந்தாலும், பாபர் மசூதிக்கு பதிலாக ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை முன்னெடுத்தவர்களின் நேர்மை மீது இந்தக் கையாடல் விவகாரம் ஒரு வலுவான ஆட்காட்டி விரலை நீட்டி கேள்வி எழுப்புவதாகவும், இது நீண்ட கால அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் சில் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
விஹெச்பி கோரிக்கைக்கு சிக்கலா?
உ.பி. அரசியலில் காணிக்கை திருட்டு விவகாரம் என்ன செய்யலாம் என்பதை பகுப்பாய்ந்தது போல் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நீண்ட கால கோரிக்கையான கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு, அரசிடம் இருக்கக் கூடாது. அது, இந்து அமைப்புகளிடம்தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் துரிதமாகப் பார்ப்போம்.
கடந்த 2025 ஜூலையில், மகாராஷ்டிராவில் நடந்த விஎச்பி நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில், ‘இந்து கோயில்கள் இந்துக்களால் தான் நிர்வகிக்கப் பட வேண்டும். கோயில்களில் காணிக்கையாகப் பெறப்படும் நிதி, இந்து சமூகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது.
அதற்கு நிச்சயமாக ஒரு வேகத்தடையாக உருவாகியிருக்கிறது அயோத்தி ராமர் கோயிலில் இந்துக்களால் நிர்வகிக்கப்பட்ட அறக்கட்டளையில் உள்ள நிர்வாகிகள் சிலர் நடத்திய காணிக்கை திருட்டு விவகாரம் என்று விஎச்பி-க்கு உள்ளேயே சலசலப்புகள் எழுந்துள்ளதாகத் தகவல்.
அதேபோல் மூத்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் சிலர், “அயோத்தி கோயிலில் நடந்துள்ள முறைகேடு ‘இந்து கோயில்களை விடுவியுங்கள்’ என்ற நீண்ட கால கோரிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்துக் கோயில்களை நிர்வகிப்பதில் சரியான ஆட்களை தேர்வு செய்வதில் தோற்றுவிட்டோம் என்பதையே ராமர் கோயில் விவகாரம் குறிக்கிறது. முதலில் மக்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் கோரிக்கையை வலிமையாக முன்னிறுத்த வேண்டும்” என்று கூறியதாகவும் தகவல்.
இந்த காலக்கோட்டைப் பார்க்கும்போது ராமர் கோயில் நிறுவியது பாஜகவின் இமாலய வெற்றி என்றால், தற்போது ஏற்பட்டுள்ள ராமர் கோயில் ‘காணிக்கை திருட்டு’ விவகாரத்தில் எந்த சேதாரமும் கட்சிக்கும், விரைவில் தேர்தலை சந்திக்கும் உ.பி. ஆட்சிக்கும் ஏற்படாமல் மீள்வது அதற்கு இமாலய சவால். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.