இந்தியா

அயோத்தியை போல் மேற்கு வங்கத்தில் ராமர் கோயில்: 2028-ல் கட்டி முடிக்க திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ‘பெங்கால் ராமர்’ என்ற பெயரில் ஒரு ராமர் கோயில் அமைக்கப்படவுள்ளது. ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இக்கோயிலுக்கான கட்டுமான பணிகள் 2028ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி(டிஎம்சி) தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி ஆட்சியில் இருப்பது மேற்கு வங்க மாநிலம். இங்கு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில், இம்மாநிலத்திலும் கோயில், மசூதி அரசியல் நிலவி வருகிறது.

          

டிஎம்சியில் (திரிணமூல் காங்கிரஸ் கட்சி) இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர் தனது முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டி வருகிறார். முதல்வரான மம்தா, தன் மாநிலத்தில் துர்கா மற்றும் மகா காளி கோயில்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் அயோத்தியைப் போல், நதியா மாவட்டத்தின் சாந்திப்பூரில் ஒரு ராமர் கோயில் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கோயில் ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட உள்ளதாகவும், வரும் 2028ம் ஆண்டிற்குள் கோயில் கட்டி முடிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெங்கால் மொழியில் கிருத்திபாஸ் ஓஜா என்பவர் எழுதிய ராமாயணம் மேற்கு வங்க மாநிலத்தவர் இடையே பிரபலம். இவர், 15ம் நூற்றாண்டில் சமஸ்கிருத ராமாயணத்தை வங்க மொழியில் ‘ஸ்ரீ ராம் பஞ்சாலி’ என்ற பெயரில் மொழிபெயர்த்த கவிஞர். இவரது ராமாயணம், இன்றும் பெரும்பாலான பெங்காலி இந்துக்கள் வீட்டில் பக்தியுடன் படிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் புதிய ராமர் கோயில், ‘பெங்காலில் ராமர்’ எனும் பெயரில் கட்டப்பட உள்ளது.

இக்கோயில் ஒரு மதக் கட்டமைப்பாக மட்டுமல்லாமல், வங்காளத்தின் கலாச்சார பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில் அமைய உள்ளது. பெங்காலில் ராமர் கோயில் கட்டும் பணியை 2017-ல் பதிவு செய்யப்பட்ட மதம் மற்றும் தொண்டு நிறுவனமான ஸ்ரீ கிருத்திபாஸ் ராம் மந்திர் அறக்கட்டளை மேற்கொள்கிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக அரிந்தம் பட்டாச்சார்யா உள்ளார். சாந்திப்பூரின் முன்னாள் டிஎம்சி எம்எல்.ஏவான பட்டாச்சார்யா, சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அறக்கட்டளை உறுப்பினர்கள் கோயில் கட்டுமானத்திற்கான நிலத்தை அளவிடுவதற்கான இறுதி ஆய்வை நடத்தினர். இது கோயிலுக்கானத் திட்டத்தின் முறையான தொடக்கமாகக் கருதப்படுகிறது. நேபாளத்தின் புகழ்பெற்ற பசுபதி நாத் கோயிலுடன் தொடர்புடைய வேத அறிஞரான அர்ஜுன் தஸ்துலா, பெங்காலில் ராமர் கோயிலின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ராமர் கோயில் பணி குறித்து அதன் அறக்கட்டளையின் தலைவரான அரிந்தம் பட்டாச்சார்யா கூறுகையில், ’சாந்திப்பூர் பக்தி இயக்கத்தின் பூமி. கிருத்திபாஸ் ஓஜா ராமரை வங்காளத்தின் உணர்ச்சிப்பூர்வமான நிலப்பரப்புடன் இணைத்தார். அவர் கற்பனை செய்த 'ராமர்' வங்காள கலாச்சாரத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இது ஒரு தேர்தல் திட்டம் அல்ல. இதற்கானத் திட்டத்தில் நாம் கடந்த 2017 ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு அரசும் உதவ விரும்பினால், நாங்கள் அதை வரவேற்போம்’ என்று அரிந்தம் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

சாந்திப்பூர்வாசிகளான லிதன் பட்டாச்சார்யா மற்றும் பூஜா பானர்ஜி என்ற இருவரும் அளித்த, 15 பிகா நிலத்தில் இக்கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோயில் வளாகத்திற்குள் ஒரு கலாச்சார மையம், ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் ஒரு ஆராய்ச்சி மையம் ஆகியவையும் அமைக்கத் திட்டமிடப்படுகிறது.

இதற்காகவும் பலர் தானமாக நிலம் அளிக்க அறக்கட்டளையினரிடம் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முத்திய நதியான ஹூக்ளியின் கரையில் உள்ள நதியா மாவட்டத்தில் சாந்திப்பூர் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான சாந்திப்பூர், சைதன்ய மகாபிரபு பாரம்பரியம், பக்தி இயக்கம் மற்றும் கீர்த்தனை கலாச்சாரத்தின் ஒரு முக்கிய மையமாக இருந்து வருகிறது.

SCROLL FOR NEXT