புதுடெல்லி: வடமாநிலங்களில் நேற்று ரக்ஷா பந்தன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தங்களுக்கு ராக்கி கட்டியவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.
வடமாநிலங்களில் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக ரக் ஷா பந்தன் விளங்குகிறது. சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தும் இந்நாளில் சகோதரர்களைத் தேடி சகோதரிகள் நேரில் சென்று அவர்களது கைகளில் ராக்கி கயிறு கட்டி மகிழ்வது உண்டு. இதற்காக, அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி சகோதரர்கள் வீடுகளை அடைய வடமாநில அரசுகள் இலவச பேருந்து சேவையை இயக்கின. உபியில் நேற்று முதல் 3 நாட்களும் மற்றும் டெல்லி, பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 2 நாட்களுக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடன் உதவிக்காக யாராவது ஒருவரை அழைத்துச் செல்லாம். இதன் காரணமாக, டெல்லியிலிருந்து மீரட் செல்லும் விரைவு சாலை மற்றும் அதன் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்கள் கூட்டம் குவிந்ததால் நெரிசலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
உபியின் பரேலியில் பாஜகவின் நகர மேயர் டாக்டர் உமேஷ் கவுதம், 20,000 பெண்களுக்கு இலவச சேலைக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதை பெறக் குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ரக் ஷா பந்தனில் ஒவ்வொரு வருடமும் பெண்கள் முக்கிய தலைவர்களைச் சந்தித்து ராக்கி கட்டுவது உண்டு. இதன்படி, பிரதமர் நரேந்திரமோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு பெண்கள், பள்ளி மாணவர்கள் ராக்கி கட்டும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவற்றைப் பகிர்ந்த பிரதமர் மோடி ‘எண்.7, லோக் கல்யாண் மார்க்கில் (பிரதமர் இல்லம்) நடைபெற்ற ரக் ஷா பந்தன் கொண்டாட்டங்கள் மறக்க முடியாத தருணங்கள். இத்திருவிழா அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தட்டும். இது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு விற்பனை செய்யப்படும் ராக்கி கயிறுகளில் தற்போதைய நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில், மத்திய, மாநில அரசுகளின் பெண்களுக்கான திட்டங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இத்துடன் வழக்கமான வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள், கார்டூன் சித்திரங்கள் உள்ளிட்ட படங்களுடனும் ராக்கி கயிறுகள் விற்பனையாகின்றன. வடமாநிலங்களில் இந்த ஆண்டு ராக்கி விற்பனை ரூ.30 ஆயிரம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.