புதுடெல்லி: தலைமை தகவல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் கோயல் நேற்று பதவியேற்றார்.
தலைமை தகவல் ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியாவின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு ஆலோசனை நடத்தியது. இதில் அந்தப் பதவிக்கு ராஜ்குமார் கோயல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் புதிய தலைமை தகவல் ஆணையராக ராஜ்குமார் கோயல் நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜ்குமார் கோயல், 1990-ம் ஆண்டு பேட்ச் அருணாச்சல பிரதேசம்- கோவா- மிசோரம்- யூனியன் பிரதேசங்கள் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் நீதித்துறையின் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான குழு மத்திய தகவல் ஆணையத்தின் 8 தகவல் ஆணையர்களின் பெயர்களையும் பரிந்துரை செய்துள்ளது. இதனால் 9 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய தகவல் ஆணையம் முழு பலத்துடன் செயல்பட உள்ளது.