புதுடெல்லி: இண்டிகோ விமான சேவை ரத்து காரணமாக, முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளை இந்திய ரயில்வே இணைத்தது.
விமானிகளின் பணிநேர வரம்பு விதிமுறைகள் அறிவிக்கபட்டதால், கடந்த சில நாட்களாக இண்டிகோ விமான சேவை வெகுவாக ரத்து செய்யப்பட்டது. இதனால் முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் நாடு முழுவதும் இயக்கப்படும் 37 ப்ரீமியம் ரயில்களில் 116 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிக தேவை உள்ள வழித்தடங்களில் செல்லும் 18 ரயில்களில் கூடுதலாக சேர் கார் மற்றும் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் நேற்று முதல் தெற்கு ரயில்வே இணைத்துள்ளது.
இதேபோல் வடக்கு ரயில்வேயும் 8 ரயில்களில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள், சேர் கார் பெட்டிகளை இணைத்துள்ளன. மேற்கு ரயில்வே, 4 ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகளை இணைத்துள்ளது. கிழக்கு மத்திய ரயில்வே, பிஹார் - டெல்லி வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் வரும் 10-ம் தேதி வரை கூடுதலாக ஏ.சி பெட்டிகளை இணைத்துள்ளன.
கிழக்கு கடற்கரை ரயில்வே, புவனேஸ்வர் - டெல்லி வழித்தடத்தில் 3 ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகளை இணைத்துள்ளது. கிழக்கு ரயில்வே 3 ரயில்களில் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை இணைத்துள்ளது. வடக்கு ரயில்வே 2 முக்கிய ரயில்களில் வரும் 13-ம் தேதி வரை ஏசி பெட்டிகளை கூடுதலாக இணைத்துள்ளது. இதுதவிர பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.