கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிர்பும், புருலியா, பஸ்சிம் பர்த்மான், பங்குரா ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி வயல்கள் உள்ளன. அங்கு சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்ததாக அரசின் ‘ஈஸ்ட்டர்ன் கோல் பீல்ட்ஸ்’ நிறுவனம் கடந்த 2020-ல் புகார் அளித்தது. இது தொடர்பாக கடந்த 2021 வரை 597 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டில் 42 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, ஹவுரா, துர்காபூர், புருலியா ஆகிய மாவட்டங்களில் 24 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதுபோல் ஜார்க்கண்டில் 18 இடங்களில் ராஞ்சி அலுவலக அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீடுகள், அலுவலகங்கள், ஆலைகள் மற்றும் பிற இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் பெருமளவு ரொக்கம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.