அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகம்
புதுடெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் காவல்துறை நடத்திய சோதனையில், ஆயுதங்கள், தோட்டாக்கள், கள்ள நோட்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்துக்கு அருகில் உள்ள எம்.எம் டவர் பகுதியில் கடந்த வாரம் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அலிகர் காவல்நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சர் ஜியாவுத்தீன் மாணவர் விடுதில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் இரண்டு 32 நாட்டுத் துப்பாக்கி ரவைகள், நான்கு 315 தோட்டாக்கள், ஒரு 9 மி.மீ தோட்டா, நான்கு 12 மி.மீ தோட்டாக்களை போலீசார் கண்டெடுத்தனர். மேலும், தலா 100 ரூபாய் மதிப்புள்ள ஆறு கள்ள நோட்டுகளும், பல சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறை வருவதற்கு முன்பே அங்கிருந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், மாணவர் விடுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இரு தரப்பு மோதல்: அலிகரின் குவார்சி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட அனுப்ஷெஹர் சாலையில் உள்ள அக்வா வாட்டர் பார்க் அருகே வாகனங்களை நிறுத்தியதில் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அலிகர் நகரைச் சேர்ந்த ஷாஹித் அலி என்பவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது கைகலப்பாக மாறியுள்ளது.
தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, மோதலில் ஈடுப்படவர்கள் அதற்குள் தப்பி ஓடிவிட்டனர். மறுநாள் காலையில், முகமூடி அணிந்த இதே நபர்கள் ஆஷியானா கிரீன் சொசைட்டியில் உள்ள ஷாஹித் அலியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த மாணவர்கள் விடுதியில் சோதனை நடத்தப்பட்டு ஃபைசல், அஷ்ரஃப் மற்றும் சாகிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அலிகர் நகர காவல் ஆய்வாளர் சர்வம்சிங், “துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான ஷாபாஸ், ஜியாவுதீன் ஆகியோர் விடுதியில் ஒரு அறையில் தங்கி இருந்த இரண்டு மாணவர்களை மிரட்டி வெளியேற்றிவிட்டு, அந்த அறையிலிருந்தபடியே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஷாபாஸ் பெயரில் எட்டு கைபேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் இரண்டு உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் தாள்களும் கிடைத்துள்ளன. இந்த மீட்புக்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.