புதுடெல்லி: ‘சத்யாகிரகம்’ என்ற டிஜிட்டல் தளத்தை காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் தங்களது உரிமைகளுக்காக தனித்தனியாகப் போராடி வருகின்றனர். ஆனால், தனித்தனியாக எழும் குரல்கள் எளிதில் ஒடுக்கப்பட்டு விடுகின்றன. நில உரிமை, பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகள், கல்வி, தேர்வுகள் என பல்வேறு விவகாரங்களுக்காகப் போராடும் மக்களின் குரல்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கவே இந்த ‘சத்யாகிரகம்’ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
அநீதிக்கு எதிராகப் போராடுபவர்கள் தங்களது விவரங்களை இதில் பதிவு செய்யுங்கள். அதற்கான ஆதரவை வழங்குவதுடன் நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும், கடிதங்கள் வாயிலாகவும் அவர்களுக்குத் துணை நிற்பேன். இவ்வாறு ராகுல் கூறினார்.